
ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான ‘சில்லுக் கருப்பட்டி’, வெவ்வேறு வயதினரிடம், வெவ்வேறு உறவுமுறைகளுக்குள்ளான சிக்கலான தருணங்களில் வெளிப்படும் அன்பைக் கோடிட்டுக்காட்டும் நான்கு கதைகளின் (‘பிங்க் பேக்’, ‘காக்கா கடி’, ‘டர்ட்டில்ஸ்’, ‘ஹே அம்மு’) தொகுப்பு. முதல் மூன்று கதைகளை ஹலிதா ஷமீம் எங்கே முடித்திருக்கிறாரோ அங்கிருந்துதான் உண்மையில் கதை தொடங்குகிறது. கலைக்குள் முரண்கள் சாத்தியப்படும்போதுதான் பல அசாத்தியமான இடங்களுக்குள் புகுந்துபார்ப்பதற்கான வாய்ப்புகள் ஒரு படைப்பாளிக்கு உருவாகும். முதல் மூன்று கதைகளிலும் அப்படியான சாத்தியங்கள் இருக்கின்றன.
பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி, குப்பைமேட்டிலிருந்து கிடைப்பதை எடுத்து அன்றாடத்தைக் கழிக்கும் சிறுவன் இருவரும் ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை. ஆனால், இருவரிடம் நட்பு மலர்கிறது. அதோடு ‘பிங்க் பேக்’ கதை முடிகிறது. இந்தக் கதையில் ஒரு காட்சி: சிறுமி மிட்டியின் வைர மோதிரத்தை அவளிடம் சேர்ப்பதற்காக சிறுவன் மாஞ்சா முயலும்போது மிட்டியின் உறவினர் அவன் திருடவந்திருப்பதாக நினைக்கிறார். அங்குதான் இயக்குநர் விளையாடிப் பார்ப்பதற்கான இடம் இருக்கிறது. மிட்டியும் மாஞ்சாவும் எப்படி, எங்கே பேசிக்கொள்ள முடியும்? மிட்டியின் வீட்டுக்குள் மாஞ்சாவால் நுழைய முடியுமா? மாஞ்சாவின் தெருவுக்குள் மிட்டியால் நுழைய முடியுமா? இரண்டு எதிரெதிர் துருவங்கள் ஊடாடும் சாத்தியம் உருவாகும்போது சுற்றியிருப்பவர்கள் எப்படி வினையாற்றுகிறார்கள் என்பதைக் கையில் எடுத்தால் ஒரு சமூகப் பிரச்சினையாக இந்தக் கதையை விரித்தெடுக்க முடியும்.
அந்தரங்க உறுப்பில் வந்திருக்கும் புற்றுநோயால் பாதிக்கப்படும் முகிலனுக்கும், திருமணம் வேண்டாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டு அப்போதுதான் வீட்டில் வரன் பார்க்கச் சம்மதித்திருக்கும் மதுவுக்கும் இடையே காதல் மலரும் தருணத்தில் ‘காக்கா கடி’ கதை முடிகிறது. அவனுடைய பிரச்சினை குறித்து அவர்கள் இருவரும் உரையாடிக்கொள்வதில் அவர்களுக்கு ஏதும் தயக்கம் இருக்கவில்லை. அதை அவளுடைய வீட்டில் எப்படி எடுத்துச்சொல்லி சம்மதிக்க வைக்கப்போகிறாள்? திருமணம் முடிந்த பிறகு இருவரும் தங்கள் அந்தரங்க வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள்? அந்த இளம் ஜோடிகளின் உறவானது காமத்துக்கு அப்பாற்பட்டு எப்படி நிலைபெறுகிறது என்பதாக இதை எடுத்துச்செல்லலாம்.
திருமணமாகாமல் வாழ்க்கை நடத்தும் பெரும்-முதிர்-கன்னி யசோதாவுக்கும், முப்பது ஆண்டுகள் வாழ்க்கை நடத்தி மனைவியை இழந்த நவநீதனுக்கும் இடையே ‘டிக்னிட்டி முத்த’த்துடன் மலரும் காதலோடு ‘டர்ட்டில்ஸ்’ கதை முடிகிறது. நவநீதனின் வீட்டில் அவனுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் யசோதாவை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதில்தானே விஷயமே இருக்கிறது? வயதான ஜோடிகளுக்கு இடையேயான காதலைத் தமிழ்ச் சமூகம் எப்படி எதிர்கொள்ளுமோ என்ற தயக்கம் இந்தக் கதையில் இழையோடுவதாகத் தோன்றுகிறது. யசோதா மணமானவளாக இல்லாமல் தனிக்கட்டையாக இருக்க வேண்டியிருக்கிறது, நவநீதனின் மனைவி இறந்துபோக வேண்டியிருக்கிறது, போதாக்குறைக்கு யசோதாவை நவநீதன் தூக்கிச்செல்ல அவளுடைய காலை வேறு உடைக்க வேண்டியிருக்கிறது.
இரண்டு நபர்களுக்கு இடையேயான உறவுச் சிக்கலை அந்த இரண்டு நபர்களுக்குள் மட்டுமே பேசித் தீர்த்துக்கொள்ளும்போது அது தனிப்பட்ட தனிநபர்ப் பிரச்சினை ஆகிவிடுகிறது. அந்தத் தனிப்பட்ட பிரச்சினையைக் கதையாக்குவது ஒருவகையில் படைப்பாளிக்கு அனுகூலமான விஷயம்; அதில் பெரியளவில் சவாலும் சுவாரஸ்யமும் இல்லை. அவர்களைக் குடும்பத்துக்குள் தள்ளும்போதுதான் சிக்கல்கள் முளைக்கின்றன. அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் கதை இருக்கிறது.