டிஜிட்டல் சூதாடிகள்

இரண்டு நாள் விடுமுறையை கிரிக்கெட் விளையாடிக் கரைத்துவிட்டு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாலையிலிருந்து தீவிரமாகப் படிக்கத் தொடங்கியிருந்தேன். 11 மணி வரை இரண்டு பகுதிதான் முடிந்திருந்தது. திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, ‘விடிவதற்குள் மிச்சம் மூன்றை எப்படி முடிப்பது?’ என்று ஒருபுறம் கணக்குபோட்டுக்கொண்டே பீதியோடு தயாராகிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் என் அத்தை அவளது மகளோடு என் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தாள். அவளது பதற்றத்தைப் பார்த்து, “எங்க போறீங்க?” என்றவனிடம் பதில் ஏதும் சொல்லாமல் முந்தானையை எடுத்து மூக்கைச் சீந்திக்கொண்டே வேகமாகக் கடந்துபோனாள். அத்தையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்தொடர்ந்துகொண்டிருந்த அத்தையின் மகள்தான், “அப்பாவக் கூப்பிடப் போறோம்” என்றாள்.

எனக்குப் புரிந்துபோனது. சீட்டாட்டத்தை விடச்சொல்லி எத்தனையோ முறை மாமாவோடு சண்டையிட்டும் அவர் திருந்திய பாடில்லை. நான் படிக்கும் முனைப்பில் அந்தக் கதையை மண்டைக்குள் போட்டுக்கொள்ளாமல் தலையைக் கவிழ்த்துக்கொள்ள ஆயத்தமானபோது, “வயசுப் பிள்ளய இந்த நேரத்துல கூட்டிட்டுப்போறது நல்லா இருக்காதுய்யா. நீ வாயேன்” என்றாள் திரும்பிவந்த அத்தை. அந்தக் கல்யாண மண்டபத்தை அடையும் வரை சீட்டாட்டத்தில் பைத்தியமாகத் திரியும் மாமாவைப் பற்றி என்னிடம் துக்கம் ததும்பும் கோபத்தோடு புலம்பித் தீர்த்துவிட்டாள் அத்தை. கண்ணீரில் அவள் கண்கள் வீங்கியிருந்தன.

மண்டபக் காவலாளி அவனே அழைத்துவருவதாக எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் என்னை இழுத்துக்கொண்டு விறுவிறுவென படியேறியவள் மாமாவின் சகாக்கள் முன்பாகவே அவரைத் திட்டியபடி அழுது அரற்றினாள். அப்படிப் பலர் முன்னிலையில் அவரை அசிங்கப்படுத்துவது அவளுடைய எண்ணம் இல்லை. ஆனால், சீட்டாட்டத்திலிருந்து அவரை மீட்க இதற்கு முன்பு அவள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் கைகூடியிருக்கவில்லை. குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாகக் கடனில் மூழ்கிக்கொண்டிருந்தது. அதன் பிறகு அத்தை அவருடன் அன்றாடம் போராடினாள். சீட்டாட்டத்திலிருந்து ஓரளவுக்கு அவரை மீட்க முடிந்தபோதும் அவரோ நெடுநாட்களுக்குத் திக்பிரமை பிடித்தவர்போலத்தான் உலவிக்கொண்டிருந்தார். குடிப்பழக்கம் எப்படி ஒருகட்டத்துக்கு மேல் குடிநோய் ஆகிறதோ, அதுபோலவே சூதாட்டமும் ஒருகட்டத்தில் கொடூரமான நோயாகிறது.

பல ஆண்டுகளுக்கு முந்தைய மாமாவின் நாட்கள் நினைவுக்கு வந்ததற்குக் காரணம் கோபி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஓலாவில் ஓட்டுநராக இருக்கிறார். காலம் மாறியிருந்தாலும் நேரம் அதே 11 மணி. வில்லிவாக்கம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிவிட்டு அகத்தியர் நகருக்கு நடைபோட்டுக்கொண்டிருந்தபோது நெருங்கிவந்த கோபி, “ஜி… எனக்கு ஒரு ஐநூறு ரூபா ட்ரான்ஸ்பர் பண்ணுங்களேன். கொஞ்சம் அவசரம். கேஷா கொடுத்திட்றேன்” என்றார். நான் அனுப்புவதாகச் சொன்னதும் என்னை வண்டியில் ஏற்றிக்கொண்டு அவரது கதையைச் சொல்லத் தொடங்கிவிட்டார்.

கல்யாணத்துக்கு முன்பு ஆறேழு வருடங்கள் சவுதியில் இருந்த கோபிக்கு சீட்டாட்டம்தான் ஒரே பொழுதுபோக்கு. எந்நேரமும் சீட்டும் கையுமாகத் திரிந்து திரிந்து இங்கே ‘ரம்மி கிங்’ என்று நண்பர் வட்டாரத்தில் அழைக்கும் அளவுக்கு அவருக்குப் பெரும் புகழ் உண்டு. தான் ரம்மியில் தோற்பதே இல்லை என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். அதேநேரத்தில், கோபியின் மனைவிக்கு அவர் சீட்டாடுவதில் கொஞ்சம்கூட விருப்பம் இல்லை என்பதும் அவரது பேச்சில் வெளிப்பட்டது. மனைவியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கோபியை மீண்டும் சூதாட்டத்துக்கு அடிமையாக்க வந்தது அது.

ஐந்து ரூபாயிலிருந்து ஆயிரக்கணக்கில் பணம் கட்டி ரம்மி விளையாடும் செல்போன் செயலி கோபிக்கு அறிமுகமானதுதான் அவரது வாழ்வு மோசமானதற்குக் காரணம். பகல் நேரங்களில் வீட்டில் படுத்துறங்கிவிட்டு இரவில் ஓலா ஓட்டும் விதமாகத் தன் வேலை நேரத்தை மாற்றிக்கொண்டார் கோபி. இரவில் டிராபிக் இல்லை என்றும், நல்ல வருமானம் கிடைக்கிறது என்றும் மனைவியிடம் ஒரு பொய்யான கதையைச் சொல்லிவிட்டு, ஒன்றிரண்டு சவாரி மட்டும் வண்டி வாடகைப் பணத்துக்காக ஓட்டிவிட்டு விடிய விடிய செல்போனில் ரம்மி விளையாடுவதுதான் கோபியின் அன்றாடம்.

ஐநூறு ரூபாய் பரிவர்த்தனைக்காக என்னைச் சாலையில் நிறுத்தி, அவரது கதையைச் சொன்னதற்கும் இதுதான் காரணம். அவர் அதோடு நிறுத்தவில்லை. அவரது மூன்று வங்கி பாஸ்புக்கைக் காட்டினார். அவர் இதுவரை ரம்மி விளையாடக் கட்டிய தொகை, சம்பாதித்த தொகை என எல்லாவற்றையும் எனக்கு விளக்கிவிட்டு, என்னுடைய கடன் அட்டையை அவரிடம் கொடுத்தால் ஒவ்வொரு மாதமும் கடன் அட்டைக்கான தொகையை அவர் கட்டிவிடுவதாகவும், லாபத்தில் 70% எனக்குத் தருவதாகவும் கடுமையாக மூளைச்சலவை செய்யத் தொடங்கினார். நான் பத்திரிகைக்காரன் என்பதால் அவரால் எப்படி ஏமாற்ற முடியும் என்றும், ஒவ்வொரு நாளும் அவர் பிறருக்காக விளையாடித்தருவது தொடர்பான வாட்ஸ்அப் உரையாடலையும் காட்டத் தொடங்கினார்.

ஆயிரக்கணக்கில் கோபி வென்றது உண்மைதான் எனினும் இழந்ததோ அதைவிட ஏராளம். சீட்டு விளையாடும் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாத கோபி, ஒருவரிடம் வாங்கி விளையாடித் தோற்பது, தோற்றதை ஈடுகட்ட இன்னொருவரிடம் வாங்குவது, இன்னொருவரிடம் வாங்கி இன்னொருவரிடம் கொடுப்பது எனக் கடுமையான கடன் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறார்.

‘ரம்மி’, ‘ட்ரீம் 11’ போன்ற பல்வேறு டிஜிட்டல் சூதாட்டங்கள் வெளிப்படையாக நடந்தேறுகின்றன. தொலைக்காட்சிகளிலேயே விளம்பரம் தருகிறார்கள். இந்திய அளவிலான நட்சத்திர நாயகர்களெல்லாம் அந்தச் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்கிறார்கள். சூது தொடர்பான சட்டம், ‘பொதுவெளியில் சூதாடினால் மட்டுமே குற்றம்’ என்கிறது. ஆக, ஒருவர் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் இன்னொரு நபருடன் செல்போன் அல்லது இணையதளம் வழியாக ஆன்லைனில் விளையாடுவதென்பது அந்தரங்கமானது என்றாகிறது; குற்றம் அல்ல என்றாகிறது.

என்னுடைய மாமா விளையாடிக்கொண்டு இருந்ததாவது மூன்று பேருடன். அவர் முன்னால் ஸ்தூலமான சீட்டுகள் இருந்தன. அவர் அடிமையாகிக்கொண்டிருப்பதையும், பணத்தை இழப்பதையும் அவரது மனைவியால் அடையாளம் காண முடிந்தது. நள்ளிரவில் மாமாவை மீட்டுவர முடிந்தது.

கோபியின் மனைவிக்கு அது சாத்தியமில்லை. அவரது நிலைமை மிகவும் துயரகரமானது. கோபி விளையாடிக்கொண்டிருப்பது லட்சக்கணக்கானவர்களுடன். யாருக்கும் ஸ்தூலமான உருவங்கள் கிடையாது. ஸ்தூலமான சீட்டுகள் கிடையாது. இழப்பதைக் கட்டுப்படுத்துவதும் கோபிக்களின் கைகளில் இல்லை. கோபி சூதாடி தன்னை இக்கட்டுக்குள் தள்ளிக்கொண்டிருக்கும் வேளையில், கோபி தன் குடும்பத்துக்காக விடிய விடிய வாடகை வண்டியோட்டி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தோடு கோபியின் மனைவியும் குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். அரசு வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கிறது.

One thought on “டிஜிட்டல் சூதாடிகள்

  1. டிஜிட்டல் சூதாடிகள் – ரம்மி’, ‘ட்ரீம் 11’ போன்ற பல்வேறு டிஜிட்டல் சூதாட்டங்கள் வெளிப்படையாக நடந்தேறுகின்றன. தொலைக்காட்சிகளிலேயே விளம்பரம் தருகிறார்கள். இந்திய அளவிலான நட்சத்திர நாயகர்களெல்லாம் அந்தச் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்கிறார்கள். சூது தொடர்பான சட்டம், ‘பொதுவெளியில் சூதாடினால் மட்டுமே குற்றம்’ என்கிறது. ஆக, ஒருவர் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் இன்னொரு நபருடன் செல்போன் அல்லது இணையதளம் வழியாக ஆன்லைனில் விளையாடுவதென்பது அந்தரங்கமானது என்றாகிறது; குற்றம் அல்ல என்றாகிறது.- நிஜம். நம் கண் முன்னே நல்லவர்களும், மிகவும் விபரம் தெரிந்தவர்களும் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். பதிவில் font size கூட்டுங்கள். எழுத்து சைஸ் கொஞ்சம் பெரிதாக இருந்தால் (12 இருக்கலாம்) என்னைப் போன்ற முதியவர்கள் சிரமமில்லாமல் படிக்க முடியும். எனது பக்கத்தில் பகிர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள் திரு த.ராஜன் – சாபக்காடு

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s