பாரதியின் வாழ்க்கையே மாயத்தன்மை கொண்டதுதான் – பா.வெங்கடேசன் பேட்டி

‘அருஞ்சொல்’ இதழில் வெளியான பேட்டி இது.

பாரதி உங்களுக்கு எப்போது அறிமுகமாகிறார்?

என்னுடைய எட்டாவது வயதில். மதுரை தானப்ப முதலி தெரு அரசுப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியில் பாரதியைப் பற்றி ஒரு வில்லுப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு முன்பாகவே ‘பாப்பா பாட்டு’, ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ என்று பாரதி அறிமுகமாகியிருந்தாலும், பாரதி என்ற பிரக்ஞை உள்ளே வந்தது அந்த வில்லுப்பாட்டிலிருந்துதான். முதலில், வில்லுப்பாட்டில் ஒரு சுள்ளானாக அமர்ந்திருந்தேன். வேறொரு பையன் வில்லுப்பாட்டு பாடுபவனாக இருந்தான். அவன் அதைச் சரியாகச் செய்யவில்லை என்று என்னை வில்லுப்பாடகனாக உட்கார வைத்தார்கள். ‘வணக்கம் செய்வோம் வணக்கம் செய்வோம், இருகரம் குவித்து வணக்கம் செய்வோம், நம்மைப் பெற்ற தாய்தந்தைக்கும், கல்வி தந்த ஆசிரியருக்கும்’ என்று ஆரம்பித்து, பாரதியின் வாழ்க்கையை ஒரு பத்து நிமிடத்தில் சொல்வதாக வில்லுப்பாட்டு அமைந்திருந்தது. வில்லுப்பாட்டின் உயிரோட்டத்துக்காக, பாரதியைப் பற்றி அமரர் தி.ஜ.ர. எழுதிய ‘பாப்பாவுக்கு பாரதி’ என்றொரு சின்னப் புத்தகம், ‘பழனியப்பா பிரதர்ஸ்’ வெளியிட்டிருந்தது, இப்போதும் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். அதைப் படிக்கச் சொன்னார்கள். அதன் வழியேதான் பாரதி என்கிற ஆளுமையின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது.

உங்களுடைய குடும்பத்தில் பாரதியின் இருப்பு என்னவாக இருந்தது? யாராவது பாரதி பற்றி உங்களுக்குச் சொல்லியிருக்கிறார்களா?

இல்லை. யாரும் சொன்னதில்லை. காந்தி, பாரதி என எல்லா ஆளுமைகளும் எனக்குப் புத்தகங்கள் வழியாகத்தான் அறிமுகம். அப்பா எனக்குப் புத்தகங்களை அறிமுகப்படுத்தி வைத்தார். நான் பாரதியை அறிமுகப்படுத்திக்கொண்டேன். ‘கப்பலோட்டிய தமிழன்’ படமெல்லாம் அப்போதே வந்திருந்தது. என்றாலும், அதையெல்லாம் சிவாஜி கணேசன் – சுப்பையா என்று பார்த்தோமே தவிர, பாரதி – கப்பலோட்டிய தமிழன் என்று பார்த்ததில்லை.

சிறு வயதுக்குப் பிறகு பாரதியை நீங்கள் மறுகண்டுபிடிப்பு செய்தது எப்போது?

மறுகண்டுபிடிப்பு என்று பாரதியைச் சொல்லவே முடியாது. பாரதி எப்படியென்றால், சாப்பாட்டுக்கும் இனிப்புப் பண்டத்துக்குமான வித்தியாசம்தான். இனிப்புப் பண்டத்தைத்தான் நீங்கள் மறுகண்டுபிடிப்பு செய்ய முடியும். சாப்பாடு எப்போதும் உங்கள் கூடவே இருக்கும். சாப்பாடு மாதிரிதான் பாரதி. எப்போது நீங்கள் இலக்கியத்துக்குள் நுழைந்துவிட்டீர்களோ, எப்போது புத்தகத்தின் வாசனை உங்கள் மூக்கில் பட்டுவிட்டதோ அப்போது நீங்கள் பாரதியை சுவாசிக்கத் தொடங்கிவிடுகிறீர்கள். பிரக்ஞைபூர்வமாகவோ பிரக்ஞையற்றோ பாரதி உங்களுக்குள் இறங்கிவிடுகிறார். நேரடியாக அல்லது பாரதியைப் பற்றி மற்றவர்கள் சொல்வதன் வழியாக அல்லது பாரதியின் வரிகள் எடுத்தாளப்படுவதன் வழியாக என எப்படியோ அவர் உங்களைத் தீண்டிவிடுகிறார். பாரதியாரைப் படித்தவர்களின் எழுத்துகளில் இருக்கக்கூடிய பாரதியின் தாக்கமே நீங்கள் பாரதியின் வாசனையை நுகர்வதற்குச் சமம்தான்.

புத்தக வாசனை தீண்டாதவர்களிடமும் பாரதி சென்றடைந்திருக்கிறார், அல்லவா? அதற்கு என்ன காரணம்?

என் மனதுக்கு என்று மட்டுமல்லாமல் தமிழ் மக்களின் மனதுக்கு நெருக்கமாக பாரதி இருக்கிறார் என்றால் இலக்கியத்தைவிட அதிகமாக சினிமாதான் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது என்பதே என் எண்ணம். பாரதியின் சிறந்த வரிகளெல்லாம் திரைப்படப் பாடல்களாக வந்ததுதான் அவர் பெரிய அளவு தெரிந்ததற்குக் காரணம். இல்லையென்றால், அவர் தீவிர வாசகப் பரப்புக்குள்ளேயேதான் இருந்திருக்கக்கூடும். திராவிட இயக்கம் பெரிய அளவில் முன்னெடுத்தும் பாரதி அளவுக்கு பாரதிதாசன் பிரபலமடையாமல் இருப்பதற்கும் காரணம் அதுதானே? கர்நாடக இசையைவிடத் திரைப்பாடல்கள்தான் பாரதியை மனதுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்திருக்கின்றன. ‘காற்று வெளியிடை கண்ணம்மா’ பாடலாகட்டும், ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் வரும் ‘தீர்த்தக் கரையினிலே’ பாடலாகட்டும், ‘ஏழாம் மனிதன்’, ‘நாம் இருவர்’ படங்களிலுள்ள பாடல்களாகட்டும்… இவையெல்லாம் தமிழ் மக்களுக்கு நெருக்கமாக பாரதியைக் கொண்டுவந்தன. இந்தப் பாடல்களெல்லாம் அப்படியே பாரதி வரிகளின் ஆன்மாவைக் கொடுத்துவிடுகின்றன என்றுதான் நான் நம்புகிறேன். அதற்காக ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், அதற்கு முன்னால் இருந்தவர்கள் எல்லோருக்குமே நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

பாரதியை மையமாக வைத்து சிறுகதையொன்று எழுதியிருக்கிறீர்கள். அவருடைய தாக்கம் உங்களுடைய படைப்புகளில் வெளிப்பட்டிருப்பதாகவும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். பாரதியின் கதையை நாவலாக எழுதும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?

பாரதியின் கதையை மாய யதார்த்தமாக எழுதும் ஆசை இருக்கிறது. உண்மையில், பாரதியின் கதையை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கனவுகளுள் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்தது. இதற்காக ஓசூரில் ஒரு பழைய வீட்டைக்கூட குறித்து வைத்திருந்தேன். பெரிய கனவுதான். முக்கியமாக, அவருடைய பாண்டிச்சேரி அத்தியாயம். பாண்டிச்சேரி சென்று முதலில் ஒரு வீட்டில் தங்கியிருப்பார். பிறகு, போலீஸ் தொந்தரவு காரணமாக வீட்டைக் காலிசெய்ய வேண்டிய சூழல் வரும். அது கற்பனையைத் தூண்டக்கூடிய ஒரு சம்பவமாக இருந்தது. பாரதியார் அந்த வீட்டில் இருக்கும்போது வீட்டுக்குச் சொந்தக்காரரிடம் போலீஸ் வந்து, அவர் பெரிய புரட்சிக்காரர் என்றும், அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் சொல்லும். வீட்டுக்காரர் இல்லை என்று சொல்வார். போலீஸ் வந்து சாவித்துளை வழியாகப் பார்க்கும்போது பாரதியின் கவிதைகளெல்லாம் காட்சி ரூபமாக அந்தச் சாவித்துளை வழியாகத் தெரிவதாகக் கற்பனை செய்து வைத்திருந்தேன்.

திரைப்படக் கனவெல்லாம் ஓய்ந்துபோன பின் இதை ‘தாண்டவராயன் கதை’ நாவலில் பயன்படுத்திக்கொண்டேன். நாவலில் நீலகண்டப் பண்டிதர் ஒரு வீட்டில் தங்குவார். அன்றிரவு சாமான்கள் போட்டுவைக்கும் பழைய அறையொன்றில் படுத்திருப்பார். நள்ளிரவில் அந்த அறையில் ஏதோ சத்தம் கேட்கவும், வீட்டுக்காரம்மா எழுந்துவந்து சாவித்துளை வழியாகப் பார்ப்பார். அப்போது அந்த அறை பெரிய நந்தவனமாகவும், அந்த நந்தவனத்தில் எண்ணற்ற பறவைகள் சிறகடித்துப் பறந்துகொண்டிருப்பதாகவும், அங்கே நீலகண்டப் பண்டிதர் நிர்வாணமாக ஆனந்தப் பெருநடனம் ஆடிக்கொண்டிருப்பதாகவும் எழுதியிருப்பேன். பாரதியாரின் கதையைப் படமாக எடுத்தால் இப்படியொரு காட்சியை வைக்க வேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்த காட்சிதான் இது. அந்த அறையில் நடப்பது, பாரதியாரின் ‘கண்ணன் பாட்’டின் தாக்கம் பெற்ற காட்சி.

பாரதியின் தாக்கம் என்னுடைய வெவ்வேறு கதைகளிலும் இருக்கிறது. ‘பாகீரதியின் மதியம்’ நாவலில் சிறையிலிருந்து உறங்காப்புலி தப்பித்து லாரியில் கல்கத்தாவுக்குப் போகிறான் இல்லையா, அவன் பாகீரதியின் வீட்டை இரவு நேரத்தில் கடந்துபோகும் தருணத்தின் உணர்வெழுச்சியைச் சொல்ல பாரதியைப் பயன்படுத்தியிருக்கிறேன். ‘வாராணசி’யிலும் பாரதியை நினைவுபடுத்தும் தருணங்கள் உண்டு. ஒரு ஏகாந்தமான பொழுது அல்லது ஒரு மாயத்தன்மை கொண்ட தருணம் அல்லது ஒரு அதீதமான உணர்வெழுச்சி… அந்த மாதிரியான தருணங்களில் நான் நிற்கும்போதெல்லாம் பாரதி கூடவந்து நின்றுகொள்கிறார்.

பாரதியிடமிருந்து நீங்கள் பெற்ற தாக்கம் என்ன?

சொற்களை ஒரு படைப்பில் பொருத்துவது மட்டும் படைப்பாளியின் ஆளுமை அல்ல; முக்கியமான இடத்தில் சொற்களைக் கைவிடுவதும்கூட படைப்புக்கு உக்கிரம் கொடுக்கும் என்பது பாரதியின் படைப்பிலிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயம். இசையிலிருந்து நான் சில அம்சங்களைக் கற்றிருக்கிறேன். உதாரணமாக, ஜாஸ் (Jazz) இசையில் இலக்கற்ற அலைச்சல் உண்டு. ஜாஸ் கேட்பதற்கே ஒரு தனி மனநிலை வேண்டும். ‘ஹவ் டு லிஸன் ஜாஸ்’ என்று புத்தகமே இருக்கிறது. ஜாஸ் இசை ஒரு கோவையாகவே வராது. அலைபாய்ந்துகொண்டே இருக்கும். அலைபாய்வது என்று சொல்வதைவிட, தடுக்கித்தடுக்கி விழும் எனலாம். கேட்பதற்கு வறட்சியாக இருக்கும். தாளகதி சீராக இருக்காது. இந்த அம்சங்களை என்னுடைய கதைகளில் கொடுக்க முயன்றிருக்கிறேன். ஒரு தாளத்தில் இல்லாமல், பலப்பல இடத்திலிருந்து போட்டுத் தடுக்கித்தடுக்கிக் கதையை நகர்த்துவது. இந்த அம்சத்தை, காலத்தைப் பிய்த்துப்போட்டு நான் எழுதுவதாகச் சொல்வார்கள். ஆனால், ஜாஸ் இசையை மனதில் கொண்டே நான் அதைச் செய்கிறேன். ஜாஸ் இசையின் இன்னொரு முக்கியமான அம்சம், அது திடுதிப்பென முடியும். அதையும் என்னுடைய கதைகளில் பயன்படுத்தியிருக்கிறேன். ‘தாண்டவராயன் கதை’ நாவலை எடுத்துக்கொண்டால், அடுத்தது என்னவோ இருக்கிற மாதிரியான உணர்வுநிலையோடே நாவல் முடியும் இடம் இருக்கும். ‘ஒரு மொந்தைக் கள்ளைக் குடித்து வந்துவிட்டுப் படுத்துக்கொண்டுவிட்டான்’ என்று முடியும்போது இன்னும் வரி இருப்பதாகத் தோன்றும். ‘மழையின் குரல் தனிமை’ குறும்புதினத்தில் ‘என்று அவள் அவனை வர்ணித்தாள்’ என்பதாக முடியும். ‘அவர் முகத்தில் நீலம் பாய்ந்தது’ என்பதாக ‘நீலவிதி’ முடியும். அந்த இடங்களில் கதை முடியும் உணர்வே கிடைக்காது. இப்படி, சொற்களைக் கைவிடும் பாணியை பாரதியிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

உதாரணம் சொல்லுங்களேன்?

ஒரு எளிமையான உதாரணம் என்றால் ‘நல்ல உயிரே’. பெரிய பிம்பத்தைப் பற்றி வர்ணிக்கும்போது அதனுடைய உச்சபட்சமான வார்த்தைகளைச் சொல்வது என்பது ஒன்றுமே சொல்லாமல் இருப்பதற்கு நிகரானது. அது பாரதியிடம் உள்ள முக்கியமான அம்சம். ‘வீணையடி நீ எனக்கு’ பாடலில் கண்ணம்மாவை வர்ணிப்பார். ‘நாதவடிவானவளே’ என்றெல்லாம் எல்லாவற்றையும் வர்ணித்து உச்சம் வந்து, அதற்கு மேல் போக வழியில்லை என்றதும் ‘நல்ல உயிரே’ என்று முடிப்பார். ‘நல்ல’ என்ற வார்த்தை பொதுவாக ஆரம்பிக்கும்போது சொல்லக்கூடியது. நல்லவள் என்று சொல்லி ஆரம்பிக்கிறோம் என்றால் அது சாதாரணமான வார்த்தை. பிறகு, எவ்வளவு நல்லவள் என்று கேட்டால்தான் அதில் உச்சத்துக்குப் போகலாம். ஆனால், இவர் எதிர்த்திசையில் இவ்வளவையும் சொல்லிய பிறகு அதற்கு மேல் சொல்ல முடியாமல் ‘நல்ல உயிரே’ என்று சாதாரணமாக இறங்கிவிடுவார். இந்தச் சாதாரணம் என்பது அவருடைய உச்சத்துக்கு நிகரானது. ‘நல்ல உயிரே கண்ணம்மா’ என்பது அவ்வளவு பிரமாதமாக வெளிப்பட்டுவிடும்.

அது எப்படி இப்படியொரு சாதாரணம் அவரிடம் உச்சமாக வெளிப்படுகிறது?

எப்படியென்றால் சரணாகதி அடைவதால்தான். இதற்கு மேல் எனக்கு ஒன்றும் தெரியாது, நீதான் கதி என்று சரணடைவதுதான். ‘நல்ல உயிரே’ என்ற வார்த்தையின் தாத்பரியம் என்னவென்றால் சரணாகதி. சரணாகதி என்பதே கவிதையின் ஆதாரமான விஷயம். சரணாகதி என்றால் என்னவென்றால் உன்னை நான் சரணடைவதற்குக் காரணம் என்ன என்று எனக்கும் தெரியாது என்பது. அதுதான் விஷயம். அதுதான் கவிதையின் ஆதாரம். காலத்தை நிறுத்துவது என்பது இதுவே. நீ யார், உன்னை எதற்காகக் கும்பிட வேண்டும், நீ எதனுடைய குறியீடு, உன்னை வைத்துப் பின்னால் என்னவாவது பேசிவிடுவார்களா, இல்லை முன்னால் ஏதேனும் பேசியிருக்கிறார்களா… இப்படி எந்தச் சிந்தனையும் இல்லாமல், இன்று நான் உன் காலில் விழுந்துவிட்டேன் என்ற உணர்வின் குறியீடு ‘நல்ல’ என்பது. இது கவிதைசொல்லியின் சரணாகதி. இதுதான் மொழியைக் கைவிடுவது. எப்போது மொழியைக் கைவிடுகிறோமோ அப்போது சரணடைந்துவிட்டோம் என்று அர்த்தம். இது பாரதியின் ஒரு பரிசோதனை என்றால், இன்னொரு பரிசோதனையில் கதாபாத்திரங்களே மொழியைக் கைவிட்டுவிடும். உதாரணமாக, ‘மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்’ என்று தொடங்கும் ‘அழகுத் தெய்வம்’ கவிதை. அதில் இரண்டு கதாபாத்திரம். ஒன்று, கனவுகாண்பவன். இன்னொன்று, கனவுகாண்பவனுடைய கனவில் வரக்கூடிய ஒரு தெய்வம். தெய்வம் என்றால் எல்லாமே தெரிந்தது, இல்லையா? அதனிடம் இவன் என்னென்னவோ கேள்விகள் கேட்பான். தெய்வம் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக்கொண்டே வரும். கடைசியில் ஒரு கேள்வி கேட்பான்: ‘மூலத்தைச் சொல்லிடவோ வேண்டாமோ என்றேன்’. மூலம் என்றால் துவக்கம். எல்லாவற்றுக்கும் துவக்கம் என்னவென்று நான் சொல்லிவிடட்டுமா, அந்த ரகசியத்தை உடைத்துவிடட்டுமா என்று கேட்கிறான். தெய்வம் அதற்குப் பதில் சொல்ல வேண்டுமில்லையா? பதிலாக, அது அங்கே மொழியைக் கைவிட்டுவிடும்: ‘முகத்தில் அருள் காட்டினாள், மோகமது தீர்ந்தேன்’ என்று முடியும். இதுதான் மொழியைக் கைவிடுவது. இதெல்லாம் பாரதியின் உத்திகள். ‘தீம்தரிகிட’ என்றெல்லாம் சொல்வதுகூட மொழியைக் கைவிடுவதுதான். ரொம்பவும் உச்சமான இடத்தில் மொழியைக் கைவிட்டுவிடுவார். இந்த மாதிரியான உத்திகளையெல்லாம் என்னுடைய கதைகளில் பயன்படுத்தியிருக்கிறேன். இவை பாரதியிடமிருந்து நான் பெற்றுக்கொண்டவை.

பாரதியை வைத்து நீங்கள் எழுதிய ‘முளை’ கதை பற்றி?

அப்பாவுக்கும் பையனுக்குமான உரையாடலாக ‘முளை’ கதை அமைந்திருக்கும். அந்தக் கதையில், சுப்பையா என்கிற பாத்திரம் சின்ன வயதிலிருந்தே ஒரு பெண் உருவத்தைப் பார்ப்பதாக எழுதியிருப்பேன். ‘நிற்பதுவே நடப்பதுவே’வில் அது வரும். ‘நிற்பதுவே நடப்பதுவே’வில் ஒரு பெண்தான் பாரதியைக் கூட்டிக்கொண்டு செல்வாள். அப்படியா இல்லையா என்று தெரியவில்லை. நான் இதே கற்பனையில் இருப்பதால் அப்படி நினைத்துக்கொள்கிறேனோ என்னவோ. ஒரு சின்னப் பெண் பின்னாலேயேதான் பாரதி அலைவார். உண்மையில், அந்தச் சின்னப் பெண் அவருடைய கற்பனை உருவம். அவருடைய அம்மாவை அப்படிக் கற்பனையாகச் செய்துகொள்கிறார். அந்தப் பெண் மேல் விழுகிற காதல்தான் அவருடைய பிற்காலத்திலும் தொடர்கிறது. அது அவருடைய கஞ்சாவாக, போதை வஸ்துவாக உருமாறுகிறது. இந்த விஷயங்களைத் திரட்டி மாயத்தன்மையோடு கதை எழுத வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இன்றைக்கும் பாரதியின் கதையை எழுத வேண்டுமென்றால் மாய யதார்த்தமாகத்தான் எழுதுவேன்.

பாரதியின் அடிப்படைக் கூறுகளான பட்டியிலினத்தவர்களோடு அவர் வைத்திருந்த நட்பு, தெருக்கூத்து போன்ற கலைகளோடு அவர் கொண்டிருந்த உறவு, அவர் தனது ஐந்தாவது வயதிலேயே அம்மாவை இழந்தது, மிகக் குறுகிய காலத்திலேயே பீறிட்ட ஞானம், அவருடைய கஞ்சாப் பழக்கம்… இவை எல்லாமே மாய யதார்த்தத்துக்கான கூறுகள். அவருடைய வாழ்க்கை யதார்த்தமானது அல்ல. எனவே, பாரதியின் வாழ்க்கையை யார் எழுதுவதாக இருந்தாலும் அதை மாய யதார்த்தமாக எழுதினால்தான் அது யதார்த்த எடுத்துரைப்பாக அமையும். அப்படியானதொரு முயற்சிதான் ‘முளை’ கதை.

பா.வெங்கடேசன் | புகைப்படம்: சீனிவாசன் நடராஜன்

(சிறுகதை) முளை

“சுப்பையா.”

“என்னப்பா?”

“சித்தே உள்ளே வாரயா என்கூட?”

“தாராளமா வர்ரேன். ஏன்ப்பா உடம்பை வலிக்கிறதா? பிடிச்சுவிடணுமா?”

“அதெல்லாம் இல்லை குழந்தை. உன்கூட தனியாப் பேசணும்.”

“உள்ளே சித்தி இருக்காளே.”

“அவ குழந்தேளை அழைச்சுண்டு கோயிலுக்குப் போயிருக்கா. வா. இப்படி உட்கார். அங்கே இல்லை. இங்கே கட்டில் மேல் என் பக்கத்தில்.”

“உங்களுக்கு வசதிக் குறைவா இருக்குமேன்னு பார்த்தேன்.”

“பரவாயில்லை வா.”

“சொல்லுங்கோப்பா.”

“வாசல்ல தெருக்குழந்தேளும் பசங்களும் விளையாடிண்டிருக்காளே பார்த்தியா?”

“பார்த்தேனே. அதப் பாத்துண்டேதான் உட்கார்ந்திருந்தேன். அடடா. அதப் பார்க்கறத்துக்குத்தான் எவ்வளவு ஆனந்தமாயிருக்கு. கீச்சுக் கீச்சுன்னுண்டு அந்த மழலைச் சத்தமும் சின்னச் சின்ன கைகால்களை அசைச்சாட்டிண்டு ஓடிவர அழகும், மண்ணை அரிசியாக்கி இலை செத்தைகளைப் பாத்திரங்களாக்கி சமையல் செய்யற பாந்தமும், அதுகள் அதைப் பகிர்ந்து சாப்டுகற அழகும், கத்தறதும் கீசறதும் ஒண்ணுக்கொண்ணு கொஞ்சிக் குலாவிக்கறதும்தான் கண்ணையும் காதையும் எப்படி நெறச்சு வழியறது.”

“சுப்பையா.”

“என்னப்பா?”

“நீ யாரு?”

“இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்லணும்?”

“அந்தக் குழந்தேள் வயசென்ன?”

“பத்து பனிரண்டு வயசுக் குழந்தேள் அத்தனையும்.”

“பசங்கள்.”

“கூட ரெண்டு வயசிருக்கும். கொஞ்சம் பெரிய குழந்தேள் அதுகளும்…”

“உன் வயசென்ன?”

“பதினாலு.”

“நீ குழந்தையில்லையாடா சுப்பையா?”

“எனக்கு இதுக்குப் பதில் சொல்லத் தெரியலையேப்பா. என்ன மன்னிச்சுக்குங்கோ.”

“உன்னொத்த வயசுக் குழந்தேளோட சேர்ந்து வெளையாடணும்னு உனக்குத் தோணவேயில்லையா. அதை விட்டுட்டு அவா வெளையாடறதைப் பார்த்து பெத்தவா சந்தோஷப்படறாப்பல சந்தோஷப்பட்டுண்டே எப்படி ஒதுங்கி நிக்கறே நீ. அவா உன்னைச் சேத்துக்க மாட்டேன்னு சொன்னாளா? நான் வேணா சொல்லட்டுமா அவா கிட்டே?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா. நீங்களா மனசில எதையாவது நெனச்சுண்டு போட்டுக் குழப்பிக்காதீங்கோ. என்னை யாரும் எதுவும் சொல்லலை. நானாத்தான் பாத்துண்டிருக்கறதுலேயே ஆனந்தமாயிருக்கேன்னு திண்ணைல நின்னிண்டிருந்தேன்.”

“…………”

“எனக்கு உன்னை நெனச்சா பயம்மா இருக்கேடா சுப்பையா.”

“மனசைப் போட்டு அலட்டிக்காதீங்கோப்பா. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விஷயத்தில் பயம். எனக்கு இப்போ போய் விளையாட்டில் கலந்துண்டேன்னா இப்படி விலகி நின்னு பாக்கிறதில் கிடைக்கிற ஆனந்தம் போய் விளையாட்டுக்கே உரிய வெற்றி தோல்வி பற்றின கவலை வந்து இந்த அற்புதமான லயிப்பைக் கெடுத்துடுமோன்னு பயம். அவ்வளவுதான். நீங்க தூங்குங்கோ. ஜாஸ்தி பேசப்படாதுன்னு வைத்யர் சொல்லிட்டுப் போயிருக்காரோல்லியோ.”

“இருடா. வைத்யர் கெடக்கார். இப்போ எழுந்து வந்து வாசத்திண்ணைல நின்னிண்டிருந்தேனே இந்தத் தென்போட என்னோட கடைசி சக்தியையும் செலவழிச்சுட்டேன்னுதான் எனக்குத் தோண்றது. குறுக்கே பேசாதக்கி நான் சொல்றதைக் கேளு. எனக்கு என்னைப் பத்தின கவலையெதுவும் கிடையாது. நன்னா சம்பாதிச்சேன். யந்திரங்களுக்கான காலம் கூடிய சீக்கிரம் வரப்போறதுன்னு அதுல ஏதாவது செய்வமேன்னு பார்த்தேன். விதேசியால காசு கரைஞ்சு ஆலையை மூடினதுதான் மிச்சம். போறாத காலம்னுதான் சொல்லணும். நெறய சேத்து குழந்தைகளுங்கூட எனக்கப்புறம் தடுமாறிட மாட்டான்னு நம்பிக்கையிருக்கு. ஆனாக்க சுப்பையா, குழந்தே, உன்னை நெனச்சாதாண்டா எனக்குப் பயம்மா இருக்கு. நீ ஏண்டா இப்படியிருக்கே?”

“நான் எப்பவும்போலத்தானேப்பா இருக்கேன்.”

“எப்பவும்போலத்தான் இருக்கே. எப்பவும்போல எல்லாரை மாதிரியும் இல்லாதைக்கு இருக்கே. உன் கணக்குப் பொஸ்தகத்தில் நீ எழுதி வைச்சிருந்ததைப் படிச்சேன் இன்னைக்கு.”

“…………”

“கணக்கு சுணக்கு பிணக்கு மணக்கு ஆமணக்கு…. என்னடா இது.”

“சும்மா தோணித்து. எழுதி வெச்சேன்.”

“என்னடா அர்த்தம் இதுக்கு? நீ பெரிய கவியோ?”

“நான் கவியுமில்லை. அது கவிதையுமில்லைப்பா. கவிதை பெரிய விஷயம். அது சும்மா தோணினபடி கிறுக்கி வெச்சது.”

“எப்படிடா இப்படித் தோணும்?”

“தோண்றதேப்பா. நான் என்ன செய்வேன். தோண்றதே. எனக்கும்தான் அதுக்கு அர்த்தம் தெரியலை. ஆனா அதை எழுதறப்போ வாசிக்கிறப்போ வரிசையா அந்த முதல் வார்த்தையை, அந்த சப்த லயத்தை விட்டு விடாதைக்கு வேறொரு வார்த்தையால் கொத்திப்போட்டு அரை இன்னொரு வார்த்தையால் தொட்டு லயம் பிசகாமல் இப்படி வாய் நிறைய சொல்லிண்டே அல்லது எழுதிண்டே போனாக்கா ஒரு திருப்தி. ஆனந்தம். ஒருவேளை இதுக்கு அர்த்தம் தெரிஞ்சால் அல்லது அர்த்தமே இல்லைனு தெரிஞ்சா இப்படி எழுத மாட்டேனாயிருக்கும். இதுக்காகவே அந்த அர்த்தத்தைத் தேட வேண்டாம்னு தோண்றது.”

“இதைப் பக்குவம்னு சொல்றதா. பைத்யாரத்தனம்னு சொல்றதா? எதுக்கு சிரிக்கிறாய்?”

“உங்க நண்பரோட தர்பார்ல இன்னிக்கு வேறொருத்தர் இதை வேற விதமாகக் கேட்டார். சுப்பையா உன்னை பாம்புன்னு மிதிக்கவும் முடியலை பழுதுன்னு தாண்டவும் முடியலைன்னு.”

“உன்னைப் பார்த்தா எனக்கே அப்படித்தான் தோண்றது. ஏன் குழந்தைன்னு உன்னை எடுத்துக் கொஞ்சவும் முடியலை. பெரிய ஞானின்னு கும்பிடவும் முடியலை. படிக்கவும் மாட்டேங்கறே. சுப்பையா…”

“என்னப்பா?”

“நீ ஏண்டா என்னை மாதிரி அஞ்ஞானிக்கு வந்து மகனாப் பொறந்தே?”

“அதுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கணுமேப்பா.”

“இன்னை பள்ளிக்கூடத்துக்குப் போனயா?”

“போனேனே. எதுக்குக் கேக்கறேள்.”

“வரலைன்னு சொன்னாளே.”

“வரலைன்னு சொல்லியிருக்க மாட்டா. வந்துட்டு பாதி வகுப்பில் வெளியே போய்ட்டேன்னு சொல்லியிருப்பா.”

“எப்படியோ. ஏன் அப்படி பாதில வெளியே போய்ட்டே?”

“…………”

“சரி வேறொண்ணு கேக்கறேன். உன் உபாத்யாயர் வந்து சொன்னார். சில பசங்களும் வந்து சொன்னா. நீ ஏதோ ஒரு பொண்ணைப் பத்தி திடீர் திடீர்னு பிரக்ஞையில்லாதைக்கு வகுப்பிலேயே பிதற்றறியாமே அப்படியா?”

“…………”

“நான் நம்பலை. செல்லம்மாகிட்டே நீ எவ்வளவு பிரியமா இருக்கேங்றது எனக்குத் தெரியும். ஒருவேளை செல்லாவைப் பத்திதான் நீ பிதற்றறாய் என்று அவா கேலி செய்யறாளோன்னு ஒரு சந்தேகம். நீ குழந்தை…”

“மன்னிச்சுக்குங்கோப்பா. இதுக்கும் என்னால் பதில் சொல்ல முடியலை.”

“ஏதடா இப்படிப் பேசறே. எனக்குக் கலக்கமா இருக்கேடா சுப்பையா.”

“நீங்க கவலைப்படறா மாதிரி எதுவும் கிடையாதுப்பா. எனக்கு அதைப் பத்திச் சொல்லத் தெரியலை. உண்மையாச் சொல்லணும்னா நான் அந்தப் பெண்ணைப் பாத்திருக்கேனா இல்லையாங்கறது பத்தி எனக்கே தெளிவா சொல்ல முடியலை.”

“இதை எந்தப் பதிலில் சேத்துக்கறது?”

“அவளை அடிக்கடி பாக்கறாப்ல இருக்கு. பேசறாப்ல இருக்கு. நான் பள்ளிக்குப் போற வழில தெருக்கோடீல திடீர்னு வந்து நின்னுண்டு என்னை அங்கேயிங்கே போகவிடாதபடி தன்னோட கூட்டிண்டு போறாள்னும் தோண்றது. ஆனா பிரமைன்னு சொல்ல முடியாதபடிக்கு அப்படியொரு தத்ரூபம். இன்னொண்ணையும் சொல்லணும். அவகிட்ட பேசிண்டிருக்கச்சே அவளைத் தவிர மத்ததெல்லாம் பிரமை மாதிரியும் தோணறாப்போல.”

“என்னடா இப்படிப் பேசறே?”

“நீங்க கேட்டதனால சொன்னேன்ப்பா. அவ எங்கேர்ந்து வாராள். எங்கே திரும்பிப் போறாள். அவ யாரு. உண்மையா பொய்யாங்கறதைப் பத்தி தெரிஞ்சுக்க எனக்கே வயசு பத்தாதுண்ணு தோண்றது. சித்தே முன்னாடி கேட்டேளே. நீ குழந்தையில்லையான்னு. அவ முன்னாடி நிக்கறப்போ மாதிரி ஒரு ஏக்கம் மனசைப் பிடிச்சு ஆட்டிண்டே இருக்கும்.”

“கேக்கறேன்னு தப்பா நெனச்சுக்காதே சுப்பையா. உன் சித்தி உன்னைக் கரிச்சுக் கொட்டறாளா?”

“நீங்க என்ன நெனைக்கறேள்னு தெரியறது. அம்மா இருந்த நினவே இல்லைப்பா எனக்கு. ஆனா இது அதுனால இல்லைன்னும் சொல்ல முடியலை. என்னவோ ஒரு ஏக்கம். ஒரு துக்கம். அந்த சமயத்தில். சித்தி தெய்வம்னா. இது வேற, இதுக்குக் காரணம்தான் எனக்கே தெரியலைங்கறேனே. அந்தப் பொண்ணு என்னை எங்கேயோ கூட்டிண்டு போய்ட்டு திடீர்னு அங்கே விட்டுட்டு காணாமப்போய்டறாள். அப்போதான் எனக்கு இந்த ஏக்கம் வந்துடறதுன்னு நெனைக்கறேன். இன்னொன்னு, இன்ன நேரம்னு இல்லாதக்கி நான் உபாத்யாயர் முகத்தைப் பார்த்திண்டிருக்கச்சையும் வந்து கூட்டிண்டுபோயிடறாள். ஏன் கையில் வெச்சிண்டிருக்கற பாடப் புஸ்தகத்தைப் பிடுங்கித் தூக்கி எறிஞ்சுட்டு இன்னிக்கு அவள் கையில வெச்சிண்டிருந்த புஸ்தகம் ஒண்ணைக் காட்டினாள். என்ன மாதிரி புஸ்தகம்ங்கறேள். அதைத் திறந்தவுடனேயே கமழ்ற வாசனையும் அதுலேர்ந்து பறக்கற பட்சிகளும் பூச்சிபொட்டுகளும் விளையாடற குழந்தைகளும் காட்டு மிருகங்களும்….”

“மஹாராஜா பழக்கிவிட்ட அந்தக் கெட்டப் பழக்கத்தை நீ இன்னும் விடலைன்னு தெரியறது.”

“அது உண்மையா இருந்தாலும் அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் ஏதும் இருக்கறதா தெரியலை. மறுபடி நீங்க என்னை மன்னிச்சுக்கணும், உங்கக்கிட்டே இப்படியெல்லாம் பேசறதுக்காக.”

“என்னமோ குழந்தை. உன்கூட பேசிண்டிருக்கப் பேசிண்டிருக்க பயம் ஜாஸ்தியாறாப்லதான் இருக்கு. நான் உனக்கு எதுவும் சொல்ல முடியும்னு தோணலை. நான் ரொம்ப நாள் இருப்பேன்னும் எனக்குத் தோணலை.”

“இப்படியெல்லாம் பேசி நீங்க என்னைத் தண்டிக்கப் படாது.”

“உண்மையைச் சொல்லணுமில்லையா. ஏதோ என்னால முடிஞ்சவரைக்கும் உன்னை வளர்த்துட்டேன். எனக்கப்புறம். உன்னை இங்கே வச்சு கவனிச்சுக்கற ஞானம் இங்கே இருக்கறவாளுக்குப் போறாதுன்னு தோண்றது. செல்லம்மா சமர்த்துதான். ஆனா அவ குழந்தை. அவளுக்கு வயசு பத்தாது. உன்னைப் புரிஞ்சுக்கறதுக்கு இன்னம் கொஞ்ச நாள் போகணும் அவளுக்கு. உன்னைப் பார்த்து பயந்துபோயிருக்கா அவ. எனக்கே இவ்வளவு வயசு பத்தாதுன்னு தோணறபோது குழந்தைய என்ன சொல்ல முடியும்.”

“நீங்க பெரிய வார்த்தையெல்லாம்….”

“எனக்கப்புறம் நீ இங்க இருக்கறது நல்லதுன்னு எனக்குப் படலை சுப்பையா. எனக்கப்புறம் நீ இங்க இருக்காதே. காசிக்கு குப்பம்மாளுக்கு எழுதிப்போட்டிருக்கேன். அங்க போய்டு. இங்கேருந்து வெளில போனாத்தான் உனக்கு உள்ளே அரிச்சிண்டிருக்கற இந்த விஷயமெல்லாம் – அது நல்லதுக்கோ கெட்டதுக்கோ – மட்டுப்பட்டு எல்லாரையும்போல குடும்பம் குழந்தைன்னு லௌகீகத்துல உனக்கு ஐக்கியம் ஏற்படும்னு நான் நம்புறேன். இந்த சப்த ஜாலம், மாயப்பொண், மந்திரப் புத்தகம் இதெல்லாம் உன்ன விட்டு முதல்ல போயாகணும்.”

“நீங்க சொன்னா தப்பா இருக்காதுப்பா. அத்தையாத்துக்கு நான் போய் தங்கணுங்கறது உங்க விருப்பமானா ரொம்பச் சரி.”

“ரொம்ப சந்தோஷம்டா குழந்தை.”

“ஆனா – இப்படிச் சொல்றதுக்காகத் திரும்பவும் நீங்க என்னை மன்னிக்கணும் – எனக்கென்னவோ அந்தப் பொண்ணு எங்கே போனாலும் எந்த ஊர்ப்பள்ளிக்கூட வாசலானாலும் அங்கே வந்து நின்னுண்டு என்னைப் போக வொட்டாம கூட்டிண்டு போய்டுவள்னுதான் எனக்குத் தோணறது – இதை நானாயிருந்து உங்களுக்குச் சொல்றதுகூட அவள்தானா தெரியலை – அது காசியானாலும் சரி, கைலாசமேயானாலும் சரி.”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s