‘ஜெய்பீம்’: ஒரு சமூகப் பிரச்சினை எப்போது துப்பறியும் கதையாகிறது?

“கொலையோடு சம்பந்தப்பட்ட எல்லா மனிதரும் குற்றவாளிதான். …வளர்ச்சியடையாத முதலீட்டியச் சமூகங்களில் ஒவ்வொருவரும் கொலைகாரராக இருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். ஒரு நேர்மையான மனிதர் சிக்கலில் மாட்டிக்கொண்டார் என்று ஒன்று இதில் கிடையவே கிடையாது. அமைப்பு ஒவ்வொருவரையும் கொலைகாரராக்குகிறது. எது முக்கியமான கேள்வியாகிறது என்றால், இந்தக் குறிப்பிட்ட வழக்கில் நீங்கள் குற்றவாளியா இல்லையா என்பது மட்டும்தான்.”

— ஜி.பி.தேஷ்பாண்டே, ‘தி டெக்ஸ்ட் அண்ட் தி ப்ளே’.

‘ஜெய்பீம்’ திரைப்படம் உருவாக்கிய விவாதங்களெல்லாம் தமிழ்ச் சூழலில் அபூர்வம். அறிவுஜீவிகள், ஆய்வாளர்கள், விமர்சகர்கள், அரசியல் தரப்பினர் என்று வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு விவாதங்களுக்கு இந்தப் படம் வழிவகுத்துத்தந்தது. ஆனால், படம் வெளியான சமயத்தில் நடந்த அரசியல்ரீதியான சச்சரவுகளால், ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் மற்ற அம்சங்கள் குறித்து விவாதிப்பது பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது; விவாதம் முழுக்கவும் குறிப்பிட்ட சில விஷயங்கள் மீதே திரும்பிவிட்டது. அது தவிர வேறு விஷயங்களைப் பேசுவது அந்தச் சமயத்தில் அபத்தமாகத் தோன்றியதால், எழுதிய கட்டுரையைப் பதிவேற்றாமல் வைத்திருந்தேன். இப்போது உங்கள் பார்வைக்கு…

ஒரு சமூகச் சிக்கலை உள்ளடக்கமாக எடுத்துக்கொள்ளும் எந்தக் கலை வடிவமும் அந்தச் சிக்கலோடு பிணைந்திருக்கும் கூறுகளை எப்படி வெளிப்படுத்துகின்றன என்பதுதான் நாம் அதை அர்த்தப்படுத்திக்கொள்வதற்கான துருப்புச்சீட்டு. ‘ஜெய்பீம்’ படத்தில் இருளர் சமூகம், ஊர் முக்கியஸ்தர்கள், ஒரு வழக்கறிஞர், காவல் துறை, நீதித் துறை போன்ற வெவ்வேறு கண்ணிகள் பிணைந்திருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் எப்படி வெளிப்பட்டிருக்கின்றன என்பதையும், அவற்றின் வெளிப்பாட்டு முறையால் நாம் பெற்றுக்கொள்வதும் இழப்பதும் என்னென்ன என்பதையும் பார்க்கலாம்.

‘ஜெய்பீம்’ படத்தின் பிரதானப் பாத்திரங்களுள் ஒருவனான ராஜாக்கண்ணு ஒரு சாமானியப் பின்னணியைச் சேர்ந்தவன், கள்ளங்கபடமற்றவன், வெகுளி, நல்ல மனசுக்காரன், சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவன். இப்படிப்பட்டவன் தான் செய்யாத குற்றத்துக்காகச் சித்தரவதைகளை அனுபவிக்கிறான். அவனது உயிரையே இழக்கும் அளவுக்கு மிகக் கொடூரமாக இருக்கிறது அந்த வதை. காவல் துறைக்கு இது நெருக்கடி. அதனால், இதை மறைக்கப்பார்க்கிறது. அதற்காக, காவல் நிலையத்திலிருந்து ராஜாக்கண்ணு தப்பிப்போய்விட்டான் என்கிறது. அதற்கேற்ப ஆதாரங்களைத் திரட்டுகிறது. இனி வழக்கு விசாரணை. ராஜாக்கண்ணுவின் தரப்பில்தான் நியாயம் என்றாலும் பல்வேறு இடர்பாடுகளுக்குப் பிறகே அவனுடைய தரப்பு வெல்கிறது. இதுதான் முடிவு. இந்த நியாயத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதில் இயக்குநருக்கு எந்தச் சிரமமும் இருக்கப்போவதில்லை. எளிமையான வழி இது. இன்னும் இந்தச் சிக்கலை எளிமையாக்கும் விதமாக, எந்தப் பாத்திரத்துக்கும் துல்லியமான சாதி அடையாளம் தரப்படவில்லை. இதனால், உள்ளடக்கமானது சமூகப் பிரச்சினையிலிருந்து நகர்ந்து நிர்வாகப் பிரச்சினையைப் பேசுவதற்கான இடம் நோக்கி இங்கே நகர்கிறது. உண்மையில், அது நிர்வாகப் பிரச்சினையையும் பேசவில்லை. எப்படி என்று பார்க்கலாம். அதற்காக, ஜோல் ஷூமாகாவின் ‘எ டைம் டு கில்’ (A Time to Kill by Joel Schumacher (1996)), ராப் ரெய்னரின் ‘எ ஃப்யூ குட் மென்’ (A Few Good Men by Rob Reiner (1992)), பெ.விருமாண்டியின் ‘க/பெ. ரணசிங்கம்’ (2020) ஆகிய படங்களை எடுத்துக்கொள்கிறேன்.

‘ஜெய்பீம்’ இருளர் சமூகத்தின் வாழ்க்கைச் சூழலை விவரிப்பதிலிருந்து தொடங்குகிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகளில், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகச் சிரித்துப் பேசிக்கொண்டு வயல்வெளியில் பதுங்கியிருக்கும் எலிகளைப் பிடித்துத்திரிகிறார்கள். ஒவ்வொருவரும் கள்ளங்கபடம் இல்லாதவர்களாக வெளிப்படுகிறார்கள். அந்தக் காட்சியிலேயே உயர்குடியைச் சேர்ந்தவர் போன்ற தோரணையில் இருக்கும் ஒருவர் இவர்களை இழிவுபடுத்தும் விதமாக — அந்தச் சூழலுக்குப் பொருந்தவில்லை என்றாலும் — பேசுகிறார். இந்தத் தன்மையிலான சித்தரிப்பு படம் முழுக்கவும் நீடிக்கிறது. வீட்டில் புகுந்திருக்கும் பாம்பை ராஜாக்கண்ணு பிடிக்கச் செல்கையில், அங்கே மறைவாகக் கிடக்கும் கம்மலை நேர்மையாகவும், அதற்கான ஆசை துளிகூட வெளிப்படாமலும் திருப்பித் தரும்போதும் அங்கே அவன் இழிவுபடுத்தப்படுகிறான் — இதுவும் அந்தச் சூழ்நிலைக்குப் பொருந்தாமல்தான் வெளிப்படுகிறது. அதற்கு ராஜாக்கண்ணு எதிர்வினை ஆற்றுவதில்லை. பிறகு, காவல் துறையினர் வெவ்வேறு தருணங்களிலும், ஊர் முக்கியஸ்தர்கள் வெவ்வேறு தருணங்களிலும் இருளர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக நடந்துகொள்கிறார்கள். இழிவுபடுத்தும் அந்தப் பாத்திரங்களெல்லாம் எல்லாக் காட்சிகளிலும் முன்தீர்மானத்தோடு இருப்பதாகவே வெளிப்படுகிறார்கள். எதிர்த்தரப்பினரும் மௌனமாக அதை ஏற்றுக்கொள்வதாகவே வெளிப்படுகிறார்கள். கறுப்பு வெள்ளையாகச் சித்தரிக்கும் இந்தத் தன்மையானது படம் முழுவதும் வியாபித்திருக்கிறது. இறுதிவரை எந்தவொரு கதாபாத்திரமும் ஒரு சிறு பண்பு மாற்றத்துக்கும் ஆளாவதில்லை. இப்படியான சித்தரிப்புக்குப் படத்தில் ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது: அது அடையாளப்படுத்துதல் தொடர்பானது.

பார்வையாளர்கள் தங்களை எந்தப் பாத்திரத்தோடு அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து படம் அவர்களுக்கான அர்த்தத்தைக் கொடுக்கவல்லது. உதாரணமாக, ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை எடுத்துக்கொள்ளலாம். பரியேறும் பெருமாளோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒருவர் அவன் தரப்பு நியாயத்தைப் புரிந்துகொண்டு படத்தை அர்த்தப்படுத்திக்கொள்ள வாய்ப்புண்டு. இன்னொருவர் தன்னை சங்கரலிங்கம் பாத்திரத்தோடு அடையாளப்படுத்திக்கொண்டார் என்றால், பரியேறும் பெருமாளுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களுக்கெல்லாம் அவர் தன்னுடைய ஆதரவையே தரக்கூடும். ஒரு படத்தை அர்த்தப்படுத்திக்கொள்ளும் செயல்பாட்டில், பார்வையாளர் தன்னை யாரோடு அடையாளப்படுத்திக்கொள்கிறார் என்பது மிக அடிப்படையான விஷயமாக இருக்கிறது. ‘ஜெய்பீம்’ மிகக் கச்சிதமாக அந்த இடத்தை ராஜாக்கண்ணு மீதும், அவர்களைச் சார்ந்தவர்கள் மீதும் தருகிறது. பார்வதி ஒரு கர்ப்பிணி. ஈவிரக்கமற்று தாக்கப்படுகிறாள். அவர்களோடு இருக்கும் இன்னொரு அப்பாவிப் பெண்ணும் இழிவுக்கும் வன்முறைக்கும் ஆளாகிறாள். தாக்குதல் ஒவ்வொன்றும் அணுஅணுவாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட படத்தில் சரிபாதி அளவில் இந்தச் சித்தரவதைக் காட்சிகள் ஆக்கிரமித்திருக்கின்றன. இதுபோக, பிரம்மாண்டமான நீதிமன்றத்தில் ஒடுங்கிப்போய் நிற்கும் அநாதரவான மக்கள், ஏதுமறியாமல் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள், உயரதிகாரியின் பிரம்மாண்ட அலுவலகத்தில் சிறுபிள்ளையோடு பார்வதி நிற்கும் காட்சி என சில நுட்பமான காட்சியமைப்புகள் இதற்கு மேலும் வலுசேர்க்கின்றன. இவையெல்லாம் பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக அவர்களோடு பிணைத்துவைத்திருக்க உதவுகின்றன — காவல் துறையினர் மீதும், இருளர் சமூகத்தை இழிவுபடுத்தும் பாத்திரங்கள் மீதும் ஒருவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதென்பது இந்தப் படத்தைப் பொறுத்தவரை அபூர்வம். இது ஒரு வகையில் எளிதான உத்தி. வழக்கமான உத்தியும்கூட.

வயிற்றுப் பிள்ளையோடு வழக்கறிஞர் சந்துருவைத் தேடி பார்வதி வருவதிலிருந்து கதை தொடங்குகிறது. மேலும் தொடர்வதற்கு முன்பாக, கிட்டத்தட்ட இதே கதைக்களனைக் கொண்ட ‘எ டைம் டு கில்’ படத்தைப் பார்ப்போம். முதல் காட்சியில், வெள்ளையினத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் குதூகலமாக வண்டியோட்டிக்கொண்டு திரிகிறார்கள். அவர்களைக் கடந்துபோகும் கறுப்பினத்தவர்கள் மீதான துவேஷத்தை வெளிக்காட்டியபடி அவர்கள் இருக்கிறார்கள். கறுப்பினத்தவர்களைச் சீண்டுவது அவர்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடியதாக இருக்கிறது. அதைச் செய்ய வேண்டியது அவர்களுடைய கடமை என்பதுபோல நடந்துகொள்கிறார்கள். அதன் நீட்சியாக, தெருவில் நடந்துபோகும் பத்து வயது கறுப்பினச் சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கும் வன்முறைக்கும் உள்ளாக்குகிறார்கள் (இந்தக் காட்சி சொற்ப விநாடிகள் அளவில் படமாக்கப்பட்டுள்ளது. ‘ஜெய்பீம்’ படத்தில் பாதிப்புக்குள்ளாகும் இருளர் சமூகத்தினர் மீதான வன்முறையானது ஒட்டுமொத்த திரைப்படத்தில் சரிபாதி அளவு காட்டப்படுகிறது என்பதை நினைவில் கொள்வோம். இப்படியான சித்தரிப்பு இல்லை என்றால் இந்தப் படம் என்னவாகியிருக்கும் என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்வோம்.) வெள்ளையினச் சிறுமியாக இருந்திருந்தால் இந்தத் துர்சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை அல்லது இந்த அளவுக்கான வன்முறையை அவள் எதிர்கொண்டிருக்க மாட்டாள் என்பதாக, அது வெள்ளை ஆதிக்கத்தின் வெளிப்பாடாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.

இரண்டு இளைஞர்களும் கைதுசெய்யப்படுகிறார்கள் — இருவரையும் கைதுசெய்ய வரும் காவல் துறையினரில் முன்வரிசையில் நிற்பவர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர், நீதிமன்றத்தின் முன் அவர்கள் நிறுத்தப்படும் வேளையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் அப்பா அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றுவிடுகிறார். அந்தச் சம்பவத்தில் ஒரு வெள்ளையினக் காவல் அதிகாரி தன்னுடைய காலை இழக்க நேர்கிறது. அதைப் பார்க்கும் சாட்சியாக ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது. இப்போது இது கொலை வழக்காக மாறுகிறது. இளைஞர்கள் இறந்துவிட்ட நிலையில், கறுப்பினத் தந்தையைக் கொலைக் குற்றவாளி என்கிறது அரசுத் தரப்பு. அவர் குற்றமற்றவர் என்று வாதாடத் துணிகிறார் வெள்ளையின வழக்கறிஞர். இங்கிருந்து கதை தொடங்குகிறது.

இந்த வழக்கறிஞருக்கு எதிராக வெவ்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வருகின்றன. அவருடைய மனைவி, பிள்ளைகள் குறிவைக்கப்படுகிறார்கள். அவருடைய வீடு தீக்கிரையாக்கப்படுகிறது. அவருடன் பணியாற்றும் வயதான பெண்மணியும் அவருடைய கணவரும் வன்முறைக்குள்ளாகிறார்கள். இதற்கிடையில், வழக்கறிஞர் இந்த வழக்கில் இறங்குவதற்கு முக்கியமான காரணமாக இருப்பது, கறுப்பினத்தவர்கள் மீதான அக்கறை அல்ல; மாறாக, அவருக்கும் பத்து வயதில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறாள் என்பதுதான். அவருடைய முற்போக்கு வேஷமும், அவரிடம் இருக்கும் வெள்ளையினச் சாய்வும் நுட்பமாக வெளிப்படுத்தப்படுகிறது. கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக இயற்றப்பட்டிருக்கும் சட்டங்கள், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் இயக்கங்கள் மீதான வெள்ளையினத்தவர்களின் வெறுப்பு, நீதிபதியின் மனச்சாய்வு, நீதி வழங்கும் குழுவில் இருப்பவர்களின் எண்ணங்கள், காவல் துறையினரின் வெள்ளையாதிக்க உணர்வு என இந்த வழக்கோடு தொடர்புடன் இருக்கும் நபர்களின் சமூக நிலைப்பாடுகள் ஒவ்வொன்றும் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டு விவாதத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன.

‘ஜெய்பீம்’ படத்துக்கு வருவோம். இங்கே சந்துருவின் வருகைக்குப் பிறகு நிர்வாகப் பிரச்சினையாகப் படம் நகரத் தொடங்குகிறது. மேலிடத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாகவே இப்படி நடந்துகொண்டதாக சப்இன்ஸ்பெக்டர் திரும்பத்திரும்பச் சொல்கிறார். வழக்கு வெவ்வேறு திருப்பங்களைச் சந்தித்த பிறகும் அவர் இறுதிவரை அதையே சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்குக் குற்றவாளி யார் என்பது தெரியும், அவரிடம் பணமும் வாங்கியிருந்திருக்கிறார் போன்ற காட்சிகளின் வழியாக இது நிர்வாகப் பிரச்சினையாக நீடிக்கும் சாத்தியத்தையும் இழந்துவிடுகிறது. மேலும், இந்த வழக்கில் ஒரு முக்கியமான அம்சமாக நீதிமன்றமும், இரண்டு நீதிபதிகளும் இருக்கிறார்கள். அடுத்தடுத்து வெவ்வேறு விஷயங்களுக்கு அவர்கள் இடமளிக்கிறார்கள். இப்படி இருக்கும்போது இந்த வழக்கில் அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பது வெளிப்பட்டிருக்க வேண்டுமில்லையா? இருவரும் தங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக்கொள்வது என்ன என்பது பார்வையாளர்களுக்குக் காட்டப்படவில்லையே, ஏன்? அது ஏன் ரகசிய உரையாடலாக இருக்கிறது? இவை போக, அரசுத் தரப்புக்காக வாதாடும் இரண்டு வழக்கறிஞர்களும் நகைப்புக்குரியவர்களாகவும், பலவீனமான வாதங்களை முன்வைப்பவர்களாகவும் இருப்பது ஏன்? இதெல்லாம் இந்தப் படத்தை நிர்வாகப் பிரச்சினையாக அணுகுவதற்கான இடத்தைத் தர மறுக்கிறது. இங்கே, ‘எ ஃப்யூ குட் மென்’ படத்தைப் பார்க்கலாம்.

ஒரு ராணுவத்தில் நடக்கும் கொலையும் அதைத் தொடர்ந்து நடக்கும் வழக்காடலுமாக இந்தப் படம் விரியும். மேலதிகாரிகளினுடைய உத்தரவின் பேரில் குற்றச் செயலுக்கு உள்ளாகும் இருவரை, குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் தரப்பில் நாயகன். அரசுத் தரப்பு அவர்களுக்கு எதிராக வாதிடுகிறது. சுவற்றில் பந்தை எரிந்தபடி சிந்திப்பது, டெலிபோன் எண்களை பிர்ன்ட்அவுட் எடுத்துப் பேசுவது, மெடிக்கல் ஷாப்பும் டாக்டரும் போலி சாட்சிகள் என நிறுவுவதற்காகத் தூர இடைவெளிகளைச் சுட்டிக்காட்டுவது என இந்தப் படத்திலுள்ள சில காட்சிகள் அப்படியே ‘எ ஃப்யூ குட் மென்’ படத்திலும் இருக்கின்றன என்ற வகையில் இதுவே ‘ஜெய்பீம்’ படத்துக்கும் உந்துதலாக இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஒருவேளை, ‘எ டைம் டு கில்’ உந்துதலாக இருந்திருக்கும் பட்சத்தில் ‘ஜெய்பீம்’, சமூகப் பிரச்சினையையும் நிர்வாகப் பிரச்சினையையும் கையாளும் படமாக வெளிப்பட்டிருந்திருக்கும். மாறாக, ‘எ ஃப்யூ குட் மென்’ படம்போல அது ஒரு துப்பறியும் கதைக்கான அம்சத்தை வரித்துக்கொண்டுவிட்டது. அங்கேயாவது குற்றவாளிகளுக்குக் குற்றச் செயலோடு நேரடியாகத் தொடர்புண்டு. அதை இல்லை என்று நிரூபிப்பதில் சவால்கள் இருக்கின்றன. இங்கே அதுவும் இல்லை.

வழக்கறிஞர் சந்துரு, சப்இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி — இவருக்கு கிடைக்கப்பெற்ற சாதி அடையாளம் திட்டமிட்டே படத்தில் வைக்கப்பட்டிருந்தாலும்கூட அது ஒரு அடையாள நிமித்தமாக இருந்திருக்குமே தவிர அதனால் வேறு ஏதும் கதைக்கு வலு சேர்ந்திருக்கப்போவதில்லை — இன்ஸ்பெக்டர் ஜெனரல் பெருமாள்சாமி, இன்ன பிற காவல் துறையினர், நீதித் துறையினர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட அடையாளமற்ற தன்மையையும் பின்புலமற்ற தன்மையையும் ராஜாக்கண்ணுவுக்கும் வழங்கியிருந்தால் இந்தப் படம் என்னவாகியிருக்கும்? சப்இன்ஸ்பெக்டர், உண்மையான சம்பவத்தில் ஒரு பட்டியலினத்தவர் என்று கூறப்படுவதைப் போல இந்தப் படத்திலும் அப்படியே காட்டியிருந்தால் என்னவாகியிருக்கும்? படத்தின் பெயரை ‘ஜெய்பீம்’ என்று வைத்திருக்க முடியுமா? எனில், இப்போது இந்தத் தலைப்பு இந்தப் படத்துக்கு எப்படிப் பொருத்தமாகிறது? பார்வையாளர்களிடம் குற்றவுணர்வை உண்டாக்குவது தன்னுடைய நோக்கமாக இருந்ததாக இயக்குநர் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் விதமான பல்வேறு பதிவுகளைப் பார்க்கிறோம். உண்மையில், இந்தப் படத்தில் நடந்திருப்பது என்ன? அந்தக் குற்றவுணர்விலிருந்து நாம் எடுத்துச்செல்வது என்ன?

இந்த இடத்தில், வெகுஜன திரில்லர் நாவல் வகைமைகளிலோ, கொலைக் குற்றங்களைக் கண்டறியும் துப்பறியும் நாவல்களிலோ மேலோங்கியிருக்கும் பயவுணர்வானது இதேபோன்ற களனைக் கொண்ட தீவிர இலக்கியங்களில் வேறு விதமாகவே வெளிப்படுவதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு பா.வெங்கடேசன் அளித்திருக்கும் பதிலைத் தருவது பொருத்தமாக இருக்கும் (‘கதையும் புனைவும்’ புத்தகத்திலிருந்து…). “ஒரு நிகழ்வு (உதாரணமாக, ஒரு கொலை) ஏற்படுத்தும் புறவயமான சமூக அச்சம், அந்த அச்சத்தைப் போக்க அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் (துப்புத் துலக்கல், கைது, தண்டனை) ஆகியவற்றை விவரிக்கும் கதையாடலை முன்வைப்பது” முதல் வகை என்றால், இரண்டாவது வகையோ “அந்தக் குற்றம் நடந்ததற்கான அகவயமான காரணிகள், குற்றத்தை நிகழ்த்தியவரின் உளப்போக்கு, பண்பாட்டுப் பின்னணி ஆகியவற்றை விவரிப்பதில் நாட்டம் கொள்கிறது.” முதல் வகை “குற்றத்திற்குப் பலியானவராக வாசகரை உணரச் செய்வதில் முனைப்புகொள்ள”, இரண்டாம் வகை “வாசகர் தன்னையே குற்றவாளியாக உணரும்படிச் செய்யும் காரணிகளை உருவாக்குகின்றன, அல்லது குறைந்தபட்சம், குற்றவாளியை உருவாக்கியதில் தனக்கும் பங்கிருக்கிறது என்றாவது உணரும்படி.” இது இங்கே நடந்திருக்கும் சிக்கலைப் புரிந்துகொள்வதற்கான மிக முக்கியமான வரையறை.

‘ஜெய்பீம்’ வழியாகப் பார்வையாளர்கள் எதிர்கொண்ட சிக்கல் என்பது இருளர் சமூகம் மீது நிகழ்த்தப்படும் கொடூரமான வன்முறையின் பாற்பட்டது. சமூகத்தின் மனதிலிருந்து மறைந்திருக்கும் ஒரு யதார்த்தத்தைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியதன் வெளிப்பாடு அது. இதேபோன்ற குற்றவுணர்வை, ஒரு அப்பாவியை நான்கைந்து பேர் அடிக்கும் எண்ணற்ற வன்முறைக் காணொளிகளிலும் நாம் அடைவதை இங்கே நினைவுகூர்வோம். இருளர் சமூகத்தின் மீதான இந்த வன்முறையைச் சித்தரிப்பது, கதையின் மையமாக இருக்கும் மற்ற அம்சங்களோடு தொடர்பற்று இருப்பதுதான் இதைக் கேள்விக்குள்ளாக்க வைக்கிறது. குற்றத்துக்குப் பலியானவர்களை விவரிப்பதில் காட்டிய ஆர்வத்தை, குற்றம் நடந்ததற்கான அகவயமான காரணிகளையோ, குற்றத்தை நிகழ்த்தியவரின் உளப்போக்கையோ, பண்பாட்டுப் பின்னணியையோ விவரிப்பதில் காட்டவில்லை. இங்கே பார்வையாளர்கள் தங்களைக் குற்றவாளிகளாகவோ அல்லது தமக்கு இந்தக் குற்றத்தில் பங்கிருக்கிறது என்றோ உணரவில்லை. மாறாக, வெறுமனே குற்றவுணர்வு அடைகிறார்கள். அதுதான் ‘ஜெய்பீம்’ படத்தின் பிரதானச் சிக்கல். இங்கே பார்வையாளர்கள் தங்களைக் குற்றவாளியாக உணர்வதாகச் சொல்வீர்கள் என்றால் அது லாக்அப் வன்முறையால் — அல்லது ஒரு அப்பாவிக்கு நேரும் அநீதி என்பதாக — தோன்றியதே அன்றி, சமூகப் பிரச்சினையாக உணர்ந்து அல்ல. இங்கே வெற்றிகரமாக உருவாக்கப்பட்டிருக்கும் அந்தக் குற்றவுணர்வானது ஒரு முகமூடியாக, பாவனையாக, படத்துக்கான மூலதனமாக வெளிப்படுகிறது.

‘பாபநாசம்’ படமும் ஒருவகையில் துப்பறியும் கதைதான்; அதை ஒரு சாமானியனின் தரப்பிலிருந்து விவரித்தது அந்தப் படத்தின் புதுமையான அம்சம் என்றால், அதைப் போல இங்கே இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிரதானமான காரணங்கள் இரண்டு உண்டு: இருளர் சமூகத்தினரிடம் மிகக் கடுமையாக நடந்துகொள்ளும் காவல் துறையினரின் நடவடிக்கையைக் காட்சிப்படுத்திய விதம் முதலாவது. இது இந்தப் படத்தின் மீதான உணர்வுபூர்வப் பிணைப்புக்குக் காரணமாகிறது. இரண்டாவது, இந்த வழக்கில் இருக்கக்கூடிய சுவாரஸ்யமான துப்பறியும் அம்சத்தைக் கண்டுகொண்டதும், அதைத் திரைக்கதையாக்கிய விதமும்.

சமூக, பண்பாட்டுப் பிரச்சினையாக விவரிக்கத் தவறியதன் விளைவாகத்தான் இது தனிநபர் சாகசமாகக் கடைசியில் எஞ்சிவிடுகிறது. இதே போன்றதொரு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ள ‘க/பெ. ரணசிங்கம்’ படத்தில் இதுவே பாதிப்புக்குள்ளான பெண்ணின் போராட்டமாக வெளிப்படுகிறது. வெளிநாட்டில் இறந்துபோன கணவனின் பிணத்தை வாங்குவதற்காக அரசு நிர்வாகத்தை எதிர்த்துப் போராடும் பெண்ணின் கதை அது. பத்து மாதங்களுக்கும் மேலாகக் கணவனின் பிணம் கிடைக்காமல் அலைந்துதிரிகிறாள். அரசுத் துறையின் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை என்னென்ன நெருக்கடிகளை அவள் எதிர்கொள்ள நேர்கிறது என்பதாகப் படம் நகரும். அதில் நாயகியின் போராட்டமாகவும், அந்த ஊர் மக்களின் பிரச்சினையாகவும் கதை மேலெழும்பிவருகிறது. ‘ஜெய்பீம்’ படத்தில், சந்துருவை பார்வதி சந்தித்த பிறகு பார்வதி கதாபாத்திரம் என்னவாகிறது என்று கேட்டுக்கொள்வோம்.

இங்கே தொகுத்துக்கொண்ட சிக்கல்களெல்லாம் ‘ஜெய்பீம்’ படத்தில் கையாளப்படவில்லை என்பதை இந்தப் படத்தின் போதாமையாகப் பார்ப்பதைவிட, சாதிப் பிரச்சினைகளை — கறுப்பினப் பிரச்சினைகளைப் போல — சினிமாவில் கையாள்வதற்கான திரைமொழி நம்மிடம் இருக்கிறதா என்றே கேட்டுக்கொள்ளத் தோன்றுகிறது. ‘ஜெய்பீம்’ படத்தின் முதல் காட்சி ஒரு சிறைச்சாலை வாயிலிலிருந்து தொடங்குகிறது. சிறையிலிருந்து விடுதலையாகிவரும் கைதிகளின் சாதி என்ன என்று கேட்கப்படுகிறது — சாதியின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு எடுத்தமைக்காக இந்தக் காட்சியானது கேரளச் சூழலோடு ஒப்பிட்டு சிலாகிக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேராதவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்; பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் ஓரமாக நிற்கவைக்கப்பட்டு, அவர்களைக் கையோடு கைதுசெய்து அழைத்துச் செல்கிறார்கள். இந்த வெளிப்படைத்தன்மையை ஏன் மற்ற பாத்திரங்கள் மீதும் ஏற்ற முடியவில்லை? கறுப்பினத்தவர்களுக்கும் வெள்ளையினத்தவர்களுக்கும் இடையிலான பிரச்சினைகளை பேச முடிவதைப் போல நாம் சாதிப் பிரச்சினைகளை விவாதித்துவிட முடியவில்லை என்பது ஒரு துரதிர்ஷ்டவசமான யதார்த்தம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s