ஒருவர் ஒரு குடும்பத்தில் எவ்வாறு பிறக்கிறாரோ அதுபோலவே ஒரு சாதியில் பிறக்கிறார். குடும்பத்தில் ஒரு தனிநபர் எவ்வாறு ஓர் அலகாக இருக்கிறாரோ அதுபோலவே சாதியக் குழுமத்தில் குடும்பம் ஓர் அலகாகிறது. ஒவ்வொரு குடும்பமும் சாதி என்ற கருத்தோடு கொள்ளும் உறவே குறிப்பிட்ட சாதியை நிலைநிறுத்துகிறது. ஒரு தனிநபருக்கும் சாதிக்கும் இடையேயான உறவானது குடும்பத்தின் ஊடாகவே சாத்தியப்படுகிறது.
— சீனிவாச ராமாநுஜம்
ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவனைக் காதலித்து அவனோடு ஓடிப்போவதற்கு மூன்று முறை முயன்ற பெண்ணின் அப்பா, நாளைக்குள் தன் மகளைக் கொன்றுவிடுவதாக சாதிப் பஞ்சாயத்தில் சத்தியம் செய்வதிலிருந்து கதை தொடங்குகிறது. கதையின் முதல் வரியே சத்தியம்தான்: “இது என் குடி தெய்வத்து மேல ஆண. சொல் மாறாது. நாளக்கி இந்த நேரத்துக்கு ஊருக்கு சேதி தெரிஞ்சிடும்.” ஏற்கெனவே சில முறை இப்படிக் கொல்வதாகச் சொல்லி, அது நடக்காமல்போனதால் ஊர் அவரை நம்ப மறுக்கிறது. அதனால், பஞ்சாயத்தில் அவர் திரும்பத்திரும்ப சத்தியம் செய்ய வேண்டியிருக்கிறது. இறுதியில், அவர் தன்னுடைய இடுப்பு வேட்டியை அவிழ்த்துப்போட்டுத் தாண்டி சத்தியம் செய்த பிறகே கூட்டம் கலைய ஆரம்பிக்கிறது. பஞ்சாயத்து முடிந்து அவர் வீட்டுக்கு வந்ததும், பிள்ளையைக் கொல்லக் கூடாது என்று, அவருடைய அம்மா தன் மடியில் இருந்த கற்பூரத்தை ஏற்றி சத்தியம் வாங்குகிறாள். தான் சத்தியம் வாங்கியிருப்பதைத் திரும்பத்திரும்ப அவருக்கு நினைவூட்டியபடி இருக்கிறாள். பெத்தவனுக்கு இரண்டு நிலைப்பாடுகளில் ஒன்று மட்டுமே நடைமுறையில் சாத்தியம். ஒன்று, தன் பெண்ணைக் கொன்று ஊர்ப் பஞ்சாயத்துக்கு வழங்கிய சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும். அல்லது, பெண்ணைக் கொல்லாமல் விட்டுவிட்டு, தன் தாய் வாங்கிய சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும். அவரைப் பொறுத்தவரை, முதல் சத்தியத்தை நிறைவேற்றுவது எளிதான காரியம். இரண்டாவது விஷயம் அவ்வளவு சுலபமல்ல. ஊரையே எதிர்த்துநிற்பதற்கு நிகரானது அது. இரண்டு சத்தியங்களில் ஏதேனும் ஒன்றை அவர் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டிய சூழலில் பெத்தவன் எடுக்கும் நிலைப்பாட்டை நாம் அர்த்தப்படுத்திக்கொள்வதற்கு, ‘இந்த இரண்டு சத்தியங்களும் எதைக் குறிக்கின்றன?’ என்று கேட்டுக்கொள்வது ஆதாரக் கேள்வியாக இருக்கிறது.
இந்தக் கேள்வியைத் தொடர்வதற்கு முன்பாக, ‘ஆதிக்கச்சாதி’யைச் சேர்ந்த கௌசல்யாவைக் காதலித்ததன் பொருட்டுப் பட்டப்பகலில் சங்கர் கொல்லப்பட்ட சம்பவத்தை முன்வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்றைப் பார்க்கலாம். அந்த ஆவணப்படத்தில், கௌசல்யாவின் தம்பி, பாட்டி, அம்மா மூவருடைய உடல்மொழியும் பேச்சில் வெளிப்படும் விஷயங்களும் நம்மை மிகுந்த பதற்றத்துக்குள்ளாக்கும். ஒரேமாதிரியான மூர்க்கமும், ஒரே மாதிரியான ஆவேசமும், ஒரேமாதிரியான மொழியும் மிக இயல்பாக அவர்களிடம் வெளிப்படும். “இப்படிக் கூட்டிட்டுப் போயிட்டாளே, அவள ஏன் இன்னும் உயிரோட வச்சிட்டு இருக்கனு ஊர்ல கேப்பாங்க” என்பான் தம்பி. “சாதியப் பத்தி அவளுக்கு [கௌசல்யாவுக்கு] சொல்லாமலே வளத்துவிட்டாங்க” என்பான். இப்படிப் பேசும் அந்தத் தம்பிக்கு, அப்போதுதான் மீசை அரும்பத் தொடங்கியிருக்கும் பருவம். இன்னொருபுறம், வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் பாட்டியிடமும் அந்தத் தம்பி வெளிப்படுத்திய அதே மனக்கவலை இருக்கிறது. ஆனால், “அவ வந்தானா பாத்துக்குவோம்” என்பாள் பாட்டி. அடுத்த நொடியே சட்டெனத் தம்பி சொல்வான்: “உன்னிய ஒரு வெட்டு. வரவளுக்கு ஒரு வெட்டு.” சங்கரை நடுரோட்டில் வைத்துக் கொல்லும் காட்சிக்கு நிகராக, இவர்கள் மூவருடைய பேச்சுகளும் பதைபதைப்பை உண்டாக்குபவையாக இருக்கின்றன. ஆணவக் கொலையை நிகழ்த்தும் ஒவ்வொருவரிடமும் இதே ஒற்றுமையைப் பார்க்கிறோம்; ‘பெத்தவன்’ கதையின் பஞ்சாயத்துக் காட்சியில் வெளிப்படுவதைப் போல.
இவர்களிடம் வெளிப்படும் இப்படியான மொழிக்குக் காரணம் என்னவென்றால் இவர்கள் சாதியின் புலன்களால் பழக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான். இவர்களது மொழியும் எண்ணவோட்டமும் நடவடிக்கையும் சாதியப் புலன்களால் பழக்கப்பட்டவையாக இருக்கின்றன. இவர்களெல்லாம் சாதியப் புலன்களால் வழிநடத்தப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த வழிநடத்தல்களின் ஊடாகவே ஒவ்வொரு சாதியச் சமூகமும் இன்னொரு சாதியச் சமூகத்தோடு உறவுகொள்வதால், இது இந்தியச் சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சினையாகிறது. மேலும், சாதிய உறவு என்பது அடிப்படையில் சமூகங்களுக்கு இடையேயானதாக இருக்கிறது. சமூகரீதியான உறவோ குடும்பம் என்ற அமைப்பைச் சார்ந்ததாக இருக்கிறது. இதனால்தான், சாதியின் ஆதார மையமாகக் குடும்பம் இருக்கிறது; குடும்பத்தின் ஊடாகவே சாதிய உறவை ஒரு தனிநபர் பெற்றுக்கொள்கிறார். இந்த வலைப்பின்னலின் சிக்கலான தன்மையானது நுட்பம் மிகுந்த காட்சி அமைப்பாலும் உரையாடலாலும் ‘பெத்தவன்’ கதையில் கையாளப்பட்டிருக்கிறது என்பதே இந்தக் கதையை நாம் சாதனையாகக் கருதுவதற்கான காரணமாகிறது.

இப்போது, அப்பா முன் இருக்கும் இரண்டு சத்தியங்களும் எதைக் குறிக்கின்றன என்ற கேள்விக்கு வருவோம். ஊர்ப் பஞ்சாயத்தில் செய்யும் சத்தியம் அவர் ஒரு சாதித் தன்னிலையாக அங்கே வெளிப்படுகிறார் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது. பிறகு வீட்டுக்கு வந்து சத்தியம் செய்யும்போது அவர் முன் இருப்பது குடும்பமும் தந்தை-மகள் உறவும். அப்படி இல்லையென்றால் தன் மகளைக் கொல்லும் முடிவிலேயே அவர் திடமாக இருந்திருப்பார். ஊரார் முன்பான அவரது நிலைப்பாடு, வீட்டுக்கு வந்ததும் ஏற்படும் மனமாற்றம், மகளிடம் வெளிப்படும் ஊசலாட்டம் ஆகிய விஷயங்களை, ‘நான்-சுயம்’ – ‘நாம்-சுயம்’ என்ற கருத்தாக்கங்கள் ஊடாக நாம் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும் (இது பற்றிய விரிவான வாசிப்புக்கு, கோபால் குருவும் சுந்தர் சருக்கையும் எழுதிய ‘எக்ஸ்பீரியன்ஸ், காஸ்ட் அண்ட் தி எவரிடே சோஷியல்’ புத்தகத்தையும், சீனிவாச ராமாநுஜம் எழுதிய ‘இந்து மதம்: ஓர் விசாரணை’ புத்தகத்தையும் பார்க்கவும்). அடிப்படையில், ஒரு தனிநபர் தன்னுடைய சுயத்தைக் கட்டமைத்துக்கொள்வதற்கு ‘நாம்-சுயம்’தான் ஆதாரமாக இருக்கிறது. ஒரு நான்-சுயம் பல்வேறு நாம்-சுயங்களால் கட்டப்பட்டதாக இருக்கிறது. உதாரணமாக, ஒரு தனிநபர் சார்ந்திருக்கும் சாதி, மதம், பார்ப்பனர்-பார்ப்பனல்லாதார்-தலித் போன்ற அரசியல் அடையாளங்கள் எனப் பல நாம்-சுயங்கள் சேர்ந்தே ஒரு நான்-சுயம் கட்டமைக்கப்படுகிறது. சாதியும் மதமும் பார்ப்பனர்-பார்ப்பனல்லாதார்-தலித் போன்ற அரசியல் அடையாளங்களும் ஒவ்வொன்றும் அதற்கென்ற தனித்த நாம்-சுயத்தைக் கொண்டிருக்கின்றன. இவற்றோடு நான்-சுயமானது தொடர்ந்த உரையாடலில் ஈடுபட்டபடி இருக்கிறது.
சாதிப் பஞ்சாயத்தில் ஊரார் என்ன பேசுகிறார்களோ அதற்கு உடன்பட்ட மனநிலையையே அப்பா பழனியும் வெளிப்படுத்துகிறார். அதாவது, பஞ்சாயத்தில் இருக்கும்போது ஒரு சாதித் தன்னிலையாக பழனி தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார். அதனால்தான், அவரால் வேட்டியை அவிழ்த்துப்போட்டுத் தாண்ட முடிகிறது. அதில் அவருக்கு எந்தச் சங்கடமும் இல்லை. மகள் செய்தது தவறு, அவள் செத்துத்தான் போக வேண்டும் என்கிற நாம்-சுய வெளிப்பாடு அதில் இருக்கிறது. அங்கே ‘மகள்’ இல்லை. பாக்கியத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் என்றாலும் அந்த இடத்தில் அவள் ஒரு பெண்தானே தவிர இவருடைய மகளாக இல்லை (ஆவணப்படத்தில் கௌசல்யாவின் சொந்தங்கள் பேசுவதும் இப்படியான சாதித் தன்னிலையின் வெளிப்பாடுதான்). ஆனால், பழனி வீட்டுக்கு வந்ததும் அவரிடம் ‘தந்தை’ வெளிப்படத் தொடங்குகிறார். அதாவது, அவருடைய நான்-சுயம் மேலெழுந்துவரத் தொடங்குகிறது. இன்னொரு புறம், அப்பாவிடம் இருக்கும் அதே மோதல் மகளிடமும் இருக்கிறது. ஆனால், அப்பாவிடமிருந்து அவள் எதிர்நிலையில் இருக்கிறாள். அப்பா சாதித் தன்னிலையாக இருக்கும்போது அவள் அதற்குள் இருக்க மறுக்கிறாள். அதுவே அவர்கள் இருவருக்கும் இடையேயான முரண்பாடாக வெளிப்படுகிறது. ஆனால், அவர் ‘அப்பா’வாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தொடங்கும்போது இவள் சாதித் தன்னிலையாக மாறுகிறாள். (அப்பா – மகள் இருவருடைய மனமாற்றமும் சந்தித்துக்கொள்ளும் புள்ளி மிகவும் முக்கியமான இன்னொரு முரண்பாட்டை நம் முன் வைக்கிறது. குடும்பநலனை மையப்படுத்திதான் அப்பா தன்னுடைய சாதிய சுயத்திலிருந்து ஒரு ‘தந்தை’யாக மாறுகிறார் என்றால், அதே குடும்பநலனை முன்னிறுத்தியே மகள் தன்னுடைய நான்-சுயத்திலிருந்து விலகி சாதிய சுயத்துக்குள் தன்னைப் பொருத்திக்கொள்ள முயற்சி எடுக்கிறாள்.) பாக்கியம் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சாதித் தன்னிலையாக மாற முற்படும்போது சாதியின் முடிவுக்குக் கட்டுப்பட நினைக்கிறாள். செத்துப்போகச் சம்மதிக்கிறாள். அதாவது, கூட்டு மனநிலைக்குள் செல்கிறேன் என்கிறாள். இந்த நிலையை அவள் மனம் மாறிவிட்டதாக நினைத்து வீட்டிலேயே இருந்துகொள்ளட்டும் என்ற யோசனையை வீட்டார் முன்வைக்கிறார்கள். ஆனால், விஷயம் கைமீறிப் போயிருப்பதால் இது சாத்தியமே இல்லை. அவர்கள் முன்பாக இரண்டு சாத்தியங்கள் மட்டுமே இருக்கின்றன: ஒன்று, அவள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் அல்லது அவள் தன்னையே அழித்துக்கொள்ள வேண்டும்.
சாதித் தன்னிலையிலிருந்து விடுபட முற்படும் பெத்தவனுக்கு இறுதியில் சாவுதான் மிஞ்சுகிறது என்றாலும், சாதியின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டுத் தன் மகளைக் கொல்வதைவிட இது மேலான முடிவுதான். விடுபட முற்படும் இந்த மனமாற்றத்தை எழுதியது ‘பெத்தவன்’ கதையின் முக்கியமானதொரு அம்சமாகும். சாதிவெறியினரின் அகநிலையைச் சித்தரித்திருக்கும் விதம் இதற்கு வலுசேர்க்கிறது. சாதிப் பிடிமானம் கொண்டவர்கள் எவ்வளவு முரட்டுத்தனமாக இருக்கிறார்கள் என்கிற உச்சபட்ச சாத்தியத்தை இமையம் சித்தரிக்கிறார். அதே அளவு பிடிமானம் கொண்ட பெத்தவனிடம் இந்த நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுவருவதன் வழியாக, சாதிப் பிடிமானமுடையவனை அதிலிருந்து விடுவிக்க முற்படுகிறார். அந்த மாற்றமானது கதையில் இயல்பாக நடக்கிறது. கைக்குழந்தை வைத்திருக்கும் பெண், வயதான கிழவி, இளைஞர்கள் என வெவ்வேறு தரப்பினர் பஞ்சாயத்தில் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதாகட்டும், வீட்டுக்குள் அப்படியான ஒரு நெகிழ்வான தருணத்திலும் சாதிப் பிடிமானம் வெளிப்படும் விதத்தை எடுத்துரைத்த விதமாகட்டும், போலீஸ் என்ற நவீன நிறுவனத்தின் பகுதியாக ‘கீழ்ச்சாதி’க்காரன் இருப்பதால் அவனை எதிர்கொள்ள முற்படும் சாதி மனோபாவத்தைச் சொன்ன விதமாகட்டும் எல்லாம் நுட்பமாக வெளிப்பட்டிருக்கின்றன.
‘ஆதிக்கச்சாதி’யைச் சேர்ந்த ஒரு ஆணை வில்லனாகச் சித்தரிக்காமல், சாதி வெறியிலிருந்து அவரை மீட்டுவரும் நுட்பத்தைக் கொடுப்பதாலேயே ‘பெத்தவன்’ மிக முக்கியமான இலக்கியப் படைப்பாகிறது. ‘ஆதிக்கச்சாதி’யைச் சேர்ந்த ஒரு கதாபாத்திரத்தை, மனசாட்சியற்ற பொதுமைப்படுத்தலுக்கு மிகச் சுலபமாக ஒரு எழுத்தாளரால் எடுத்துச்சென்றுவிட முடியும். ஆனால், சாதிப் பிடிமானம் கொண்ட ஒரு தகப்பனை, சாதியின் அடிப்படையில் சாராம்சப்படுத்தாமல், இமையம் தன்னை அந்த நிலைக்குள் பொருத்தி, அவருடைய உணர்வுகளின் ஊடாகப் பயணித்து, ‘தந்தை’யின் கண்ணியத்தை மீட்டெடுக்கிறார். இந்தக் கதையில் இது மிகவும் முக்கியமான விஷயமாகும். இந்தக் காரணங்களால்தான், இந்தியச் சமூகத்தை இயக்கிக்கொண்டிருக்கும் மிகப் பெரும் அதிகாரக் கட்டமைப்பான சாதியின் வெவ்வேறு பரிமாணங்களை, அடர்த்தியும் நுட்பமும் பன்முகத்தன்மையும் கூடிய இலக்கியங்களாகப் படைத்துவரும் இமையம் எழுதிய ‘பெத்தவன்’ ஒரு அசாத்தியப் படைப்பாகிறது!