ரேமண்ட் கார்வரின் ‘கதீட்ரல்’: இரு மொழிபெயர்ப்புகள் – ஓர் ஒப்பாய்வு

The art of translation lies less in knowing the other language than in knowing your own.
– Ned Rorem

Writers make national literature, while translators make universal literature.
– José Saramago

Translation is that which transforms everything so that nothing changes.
– Günter Grass

O

‘யதார்த்தக் கதைகள் எழுத விரும்பினால் அவை ரேமண்ட் கார்வரைப் போல இருக்க வேண்டும்’ என யதார்த்தக் கதைகளின் மீது ஆர்வம் காட்டும் நண்பர்களிடம் சொல்வதுண்டு. நுட்பமான யுக்தியின் மூலம் ஒரு கதையை வழக்கமான பாணியிலிருந்து – தேய்வழக்கிலிருந்து – மீட்டெடுத்துச் சென்றுவிடும் வல்லமை கார்வருக்கு உண்டு. ‘A Small, Good Thing’ கதையில் அந்நுட்பம் பேக்கரிக்காரனிடமிருக்கிறது. விபத்துக்குள்ளாகியிருக்கும் மகனுக்கு சிகிச்சை அளிப்பதில், நவீன சிகிச்சை முறையின் போதாமையையும் பெற்றோர்களின் பரிதவிப்பையும் விவரிக்கும் ‘A Small, Good Thing’ கதையை பேக்கரிக்காரன் தவிர்த்து கற்பனை செய்தோமானால் இக்கதை ஒரு வழக்கமான பாணியில் சிக்கிவிடும். அவ்வாறு எழுதப்பட்டிருந்தால் அக்கதை தரும் உணர்வோ வேறொன்றாக – அச்சூழலை எதிர்கொள்ளத் தவிக்கும் பெற்றோரின் பரிதவிப்பு ஒரு துயர நாடகமாக – இருந்திருக்கும். ஆனால், பேக்கரிக்காரன் இக்கதைக்கு முற்றிலும் புதிதான சுவை தருகிறான். கார்வரின் ஒவ்வொரு கதையிலும் இத்தகைய நுட்பங்களைப் பட்டியலிட முடியும். அதுவே அவரது தனித்துவமும்கூட.

Raymond Carver, 1984.

கார்வரின் கதைகளைத் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்த பலரும் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். எனது மேலோட்டமான கணக்கெடுப்பிலேயே ஏழு மொழிபெயர்ப்பாளர்களை இனங்காண முடிந்தது. கார்வரின் ஒரே கதைக்கு வெவ்வேறான மொழிபெயர்ப்புகளும் இங்கே நிகழ்ந்திருக்கின்றன. யதார்த்த கதைகளைத் தொடர்ந்து படைத்துவரும் தமிழ் இலக்கியச் சூழலில் கார்வரின் வரவு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ் மொழிபெயர்ப்புகளில் நாம் கார்வரை அடையாளம் காண்பது வெகு சிலவற்றில் மட்டுமே. பெரும்பாலும் ‘தமிழ் கார்வரா’க உருமாறியே நம்மிடம் வந்துசேர்ந்திருக்கிறார்.

கார்வரின் கதைகளைத் தனித்தனியாக ஆராய்ந்து எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகள் ஆங்கிலத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. அதனுடன் தமிழில் கார்வரின் கதைகளுக்கு எழுதப்பட்ட வாசிப்பனுபவங்களை ஒப்பு நோக்கும்போது வேறு மாதிரியான வாசிப்பு இங்கே நிகழ்ந்திருப்பதை அறிய முடிந்தது. வாசகனின் அனுபவம், இலக்கியம் குறித்த நிலைப்பாடு, வாசிப்பின்போதான மனநிலை என இத்தகைய தற்காலிகமான காரணிகளைப் பொறுத்து ஒரு பிரதி ஒரு வாசகனிடம் தன்னை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்திக்கொள்ளும்தான். ஆனால் அத்தகைய பார்வை, பிரதியால் அல்லாமல் மொழிபெயர்ப்பில் நேர்ந்த சில சிடுக்குகளால் வேறொன்றாக இங்கே நிகழ்ந்துள்ளது. இதைச் சுட்டிக்காட்டும் பொருட்டு, கார்வரின் ‘கதீட்ரல்’ கதைக்குத் தமிழில் வெளியாகிய இரண்டு மொழிபெயர்ப்புகளை மூலப்பிரதியுடன் ஒப்பிட்டு இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன். வரிக்கு வரி ஒப்பிட்டு கணக்கெடுத்த பிழைகள் ஏராளம். அவற்றில் மிக மிக சொற்பமான பிழைகளையே இக்கட்டுரை கோடிட்டுக் காட்டுகிறது.

ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பு ‘கனவுகளுடன் பகடையாடுபவர்’ தொகுப்பிலும் செங்கதிரின் மொழிபெயர்ப்பு ‘வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு’ தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளன.

O

ரேமண்ட் கார்வரின் புகழ்பெற்ற ‘கதீட்ரல்’ கதையின் கதைசொல்லிக்குப் பெயரில்லை. தன்னிலையில் விரியும் இக்கதை அந்தக் கதைசொல்லியைப் பற்றியதே. கதைசொல்லியின் குணாதிசியம், பொதுபுத்தியாக வெளிப்படும் பார்வையற்றவர்கள்மீதான வெறுப்பு, அவனது மனப்போக்கில் ஏற்படும் இயல்பான மாற்றம் என மிக நுட்பமாக விரியும் கதை இது. கார்வரின் இக்கதையிலிருந்து ஏதேனும் ஒரு வார்த்தையைக் குறைக்கவோ சேர்க்கவோ எவ்வளவு பிரயத்தனப்பட்டாலும் சாத்தியமில்லை. “நான் கவிதை எழுதுவதைப் போலவே எனது கதைகளை எழுதுகிறேன், ஒரு வரி அடுத்த வரி என ஒரு கதையாக மாறுவதைக் காண்கிறேன்” என்கிறார் கார்வர். ஒரு கதையில் பல்வேறு முறை திருத்தங்களை மேற்கொள்ளும் கார்வரின் கதைகளுள் மிகவும் கவனமாகக் கோர்க்கப்பட்ட வார்த்தைகளால் நிரம்பியிருக்கிறது ‘கதீட்ரல்’.

‘கதீட்ரலி’ல் ஓர் அழகிய முரண் இந்தக் கதைசொல்லி. படர்க்கையில் இக்கதை பயணமாகியிருந்தால் எழுத்தாளருக்கான சுதந்திரம் சற்று விஸ்தாரமாக இருந்திருக்கும். பார்வையற்ற ராபெர்ட்டின் தரப்பை விரிவாக எடுத்துரைத்தும் கதைசொல்லியின் மனைவியின் குரலைக் கொஞ்சம் அதிகமாக ஒலிக்கவிட்டும் நகர்த்தியிருந்திருக்கலாம். கதைசொல்லியின் குரலிலேயே அவனது இயல்பை துல்லியப்படுத்தியிருப்பது, அவனது எதிர்மறையான எண்ணத்தை வெளிப்படுத்தியிருப்பது, கதையின் முடிவில் அவனது மனத்திரையில் படிந்திருக்கும் புகைமூட்டத்தை அவன் அறியாமலே விலக்கியிருப்பது என கார்வரின் படைப்பாற்றல், சிறு சிறு விஷயத்திலும் நுட்பமாக ‘கதீட்ரலி’ல் செயல்பட்டிருக்கிறது.

கதைசொல்லியின் பொறுப்பற்ற தன்மையை, குறுகிய மனப்பான்மையை, அலட்சியத்தனத்தை வெளிப்படுத்தும் தொனி இக்கதையின் முக்கியமான அம்சங்களுள் ஒன்று. பிறரைப் பொருட்படுத்தும் தன்மை கதைசொல்லியிடம் வெளிப்படுவதே இல்லை. எளிதில் பிறரைக் காயப்படுத்தும் சொற்களை வெளிப்படுத்துபவனாகவும், கேலிசெய்பவனாகவும் இருக்கிறான். முதல் வரியே ‘இந்தக் குருடன்’ என்றுதான் ஆரம்பிக்கிறார். கதையின் ஒட்டுமொத்த சாரத்தைத் துல்லியப்படுத்தும் மிகக் கச்சிதமான துவக்க வரியை இக்கதை கொண்டிருக்கிறது.

‘கதீட்ரல்’ கதையின் முதல் பத்தி –

Carver: This blind man, an old friend of my wife’s, he was on his way to spend the night. His wife had died. So he was visiting the dead wife’s relatives in Connecticut. He called my wife from his in-law’s. Arrangements were made. He would come by train, a five-hour trip, and my wife would meet him at the station. She hadn’t seen him since she worked for him one summer in Seattle ten years ago. But she and the blind man had kept in touch. They made tapes and mailed them back and forth. I wasn’t enthusiastic about his visit. He was no one I knew. And his being blind bothered me. My idea of blindness came from the movies. In the movies, the blind moved slowly and never laughed. Sometimes they were led by seeing-eye dogs. A blind man in my house was not something I looked forward to.

ஜி.குப்புசாமி: என் மனைவியின் பழைய நண்பனான இந்தக் குருடன் எங்கள் வீட்டில் தங்குவதற்காக வந்துகொண்டிருக்கிறான். அவன் மனைவி இறந்துவிட்டாளாம். அதனால் கனெக்டிகட்டில் இறந்துபோன மனைவியின் உறவினர்களைச் சென்று சந்தித்துக்கொண்டிருந்தான். அவன் மாமனார் வீட்டிலிருந்து என் மனைவியிடம் பேசினான். ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவன் ஒரு ஐந்துமணிநேர ரயில் பயணத்தில் வரப்போகிறான். என் மனைவி ஸ்டேஷனுக்குச் சென்று அழைத்து வருவாள். பத்து வருடங்களுக்கு முன்பு சியாட்டிலில் ஒரு கோடைப்பருவத்தில் அவனிடம் பணியாற்றியபிறகு அவனை அவள் பார்த்திருக்கவில்லை. ஆனால் அவளும் அந்தக் குருடனும் தொடர்பில் இருந்திருக்கின்றனர். டேப்புகளில் தகவல்களைப் பதிவுசெய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டிருந்தனர். அவன் வருகையைப் பற்றி நான் ஆர்வமாக இல்லை, அவன் யாரென்றே எனக்குப் பரிச்சயமில்லாதது மட்டுமல்ல, அவன் குருடன் என்பது என்னைத் தொந்தரவு படுத்திக்கொண்டிருந்தது. குருட்டுத்தனம் பற்றிய என் கருத்துகளெல்லாம் திரைப்படங்களிலிருந்து வந்தவை. திரைப்படங்களில் குருடர்கள் மெதுவாக நடப்பார்கள். எப்போதுமே சிரிக்கமாட்டார்கள். சிலநேரங்களில் கண்காணிப்பு நாய்களால் வழிநடத்திச் செல்லப்படுவார்கள். குருடன் ஒருவன் என் வீட்டில் தங்குவது நான் ஆவலுடன் எதிர்நோக்கியிராத ஒரு விஷயம்.

செங்கதிர்: என் மனைவியின் நீண்டநாள் நண்பனான குருடன் இன்று இரவு எங்கள் வீட்டில் தங்க வந்துகொண்டிருக்கிறான். அவனது மனைவி இறந்து போய்விட்டாள். கனக்டிகட்டில் வசிக்கும் தனது மனைவியின் உறவினர்களிடம் அவன் வந்திருக்கிறான். தனது மாமியார் வீட்டிலிருந்து எனது மனைவியிடம் தொலைபேசியில் பேசினான். ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ரயிலில் வருகிறான் அவன். ஐந்து மணிநேரப் பயணம். என் மனைவி இரயில் நிலையத்திற்குச் சென்று அழைத்து வருவாள். என் மனைவி அவனைக் கடைசியாகப் பார்த்தது, சியாட்டிலில் பத்து வருடம் முன்பு ஒரு கோடைக்காலத்தில் அவனிடம் வேலை செய்தபோது. அதன் பின் இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை. ஆனாலும் அவளும் குருடனும் தொடர்பில் இருந்தார்கள். அவர்கள் ஒலிநாடாவில் அனுபவங்களைப் பதிவு செய்து, அதைத் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டார்கள். அவனது வருகையைப் பற்றி எனக்கு ஆர்வமெதுவும் இருக்கவில்லை. அவன் குருடனாய் இருப்பது என்னை மேலும் எரிச்சல் படுத்தியது. பார்வையின்மை பற்றிய எனது எண்ணம் திரைப்படங்களிலிருந்து உருவானது. படங்களில் குருடர்கள் மெதுவாக நடந்தார்கள். சிரிப்பதேயில்லை. சில சமயம், பார்வைத் தெரிந்த நாய்கள் அவர்களை வழிநடத்திச் சென்றன. என் வீட்டில் குருடன் இருப்பது, நான் எதிர்பார்த்த ஒன்று அல்ல.

பார்வையற்றவர்கள் மீதான கதைசொல்லியின் பொதுபுத்தி, அலட்சியத்தனம், ராபெர்ட்டின் வருகையை வெறுக்கும் தன்மை இவற்றைச் சுட்டிக்காட்ட ‘This blind man’ என்று ஆரம்பிக்கிறார் கார்வர். கதைசொல்லியின் குரலில் இந்தத் தொனி தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கும். ராபெர்ட்டுடனான உரையாடலின் நெருக்கத்த்குக்குப் பிறகே இந்தத் தொனியில் மாற்றம் ஏற்படும். அதுவும் வெளிப்படையான மாற்றம் அல்ல. அவனது குரலில் வெளிப்படும் அலட்சியத்தன்மை கதையின் ஓட்டத்தில் இயல்பாய்க் குறைந்திருக்கும். ‘இந்தக்’ குருடன் – இந்த வார்த்தையைத் தவிர்த்துவிட்டார் செங்கதிர். Old friend என்பது நீண்டநாள் நண்பன் என மாறியும், கார்வரின் வரிகளில் இல்லாத ‘எங்கள் வீட்டில்’ போன்ற கூடுதல் வார்த்தைகளை சேர்த்தும் இருக்கிறார். ‘அவன் மனைவி இறந்துவிட்டாளாம்’ என்பதில் தென்படும் அலட்சியம் ‘அவனது மனைவி இறந்து போய்விட்டாள்’ என்பதில் இல்லை. அதேபோல blindness என்பதை பார்வையின்மை எனவும் தமிழ்படுத்தியிருக்கிறார். கதைசொல்லியின் தொனி அப்படியானதல்லவே! செங்கதிரின் மொழிபெயர்ப்பில், hadn’t seen என்பது சந்தித்துக்கொள்ளவில்லை (meet) எனவும் idea என்பது எண்ணம் (thought) எனவும் dead wife’s relatives என்பது மனைவியின் உறவினர்கள் (இறந்த என்பதைக் கத்தரித்துவிட்டார்) எனவும் மாறியிருக்கிறது. இதில் உச்சம், ‘Seeing-eye dogs’ என்பதை ‘பார்வைத் தெரிந்த நாய்கள்’ என மொழிபெயர்த்திருப்பது! ‘Seeing-eye dogs’ என்பதற்கு கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் தரும் மொழிபெயர்ப்பு ‘கண்ணுக்குத் தெரியும் நாய்கள்’. அந்த வகையில் நாம் கொஞ்சம் பாக்கியசாலிகளே!

O

கார்வர், பூடகமாக சொல்லியதை – அது மறைமுகமாக உணர்த்தும் அர்த்தத்தை – அவர் பயன்படுத்தாத புதிய வார்த்தைகளை செங்கதிர் தனது மொழிபெயர்ப்பில் நுழைக்கிறார். சில வார்த்தைகளைக் கத்தரிக்கவும் செய்கிறார்.

உதாரணமாக,

Carver: Maybe I just don’t understand poetry. I admit it’s not the first thing I reach for when I pick up something to read.

ஜி.குப்புசாமி: ஒருவேளை கவிதையை நான் புரிந்துகொள்ளாதவனாக இருக்கக்கூடும். எதையாவது படிக்க வேண்டியிருந்தால் நான் முதலில் தேடி எடுப்பது அதுவாக இருக்காது என்பதை மட்டும் ஒப்புக்கொள்கிறேன்.

செங்கதிர்: எனக்குக் கவிதைகள் புரிவதில்லை. ஏதாவது படிக்க வேண்டும் என்று நான் விரும்பும்போது கவிதைகளின் பக்கம் என் கை முதலில் போவதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

‘Maybe’ என்ற வார்த்தையை செங்கதிர் பொருட்படுத்தவில்லை. ‘கவிதைகளின் பக்கம்’ என்பது முந்தைய வரிகளின் துணையோடு நாம் புரிந்துகொள்ள வேண்டியது. இத்தகைய சிறு சிறு விஷயத்தால் உரை எழுதுவதுபோல கார்வரின் கதைக்கு, செங்கதிர் தனது மொழியில் தனது தொனியில் வேறொன்றாக எழுதிப்பார்த்திருக்கிறார் என்றாகிவிடுகிறது.

O

இலக்கணம் –

Carver: Now the same blind man was coming to sleep in my house.

ஜி.குப்புசாமி: இதே குருடன்தான் இப்போது என் வீட்டில் தங்குவதற்காக வந்துகொண்டிருக்கிறான்.

செங்கதிர்: இப்பொழுது அதே குருடன்தான் என் வீட்டில் தங்க வருகிறான்.

O

செங்கதிர்:

‘Colored woman’ என்பது ‘கருப்புப் பெண்கள்’ எனவும் ‘have you just flipped’ என்பது ‘வாய் தவறி உளறுகிறாயா’ எனவும் ‘He lifted his beard slowly and let it drop’ என்பது ‘தாடியைக் கொஞ்சமாகத் தூக்கி மீண்டும் கீழே விட்டான்’ எனவும் ‘He’d turn his blind face’ என்பது ‘பார்வையற்ற முகத்தைத் திருப்பி’ எனவும் மொழிபெயர்ப்பாகியிருக்கிறது. ‘I saw my wife laughing as she parked the car’ என்பதை ‘காரை நிறுத்திக்கொண்டே, என் மனைவி சிரிப்பதைப் பார்த்தேன்’ என்று மொழிபெயர்த்திருக்கிறார். கதைசொல்லி காரை நிறுத்திக்கொண்டிருக்கும்போது அவனது மனைவி சிரிப்பதைப் பார்த்தான் என்பதாகவும் இதை அர்த்தப்படுத்திக்கொள்ளும் சாத்தியமுள்ளது.

அயல் இலக்கியத்தில் நிகழும் உரையாடலை பேச்சுவழக்கில் எழுதுவதை முடிந்த அளவு தவிர்த்துவிடலாம். அப்படி பேச்சுவழக்குக்கு மாறும்போதே அது ஒருவித உள்ளூர்த்தன்மையை அடைந்துவிடுகிறது. அயல் தேச இலக்கியத்தை வாசிக்கும் வாசகன் அது வேறொரு தேசத்தில் வேறொரு மொழியில் நிகழ்கிறதென்பதை நன்கறிவான். அதைத் தமிழ் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடப்பதுபோல எழுத வேண்டியதில்லை. உரையாடல்: ‘நான் மேலே போய், உடை மாற்றிக்கிட்டு வர்றேன். நான் வேறு ஏதாவது உடையணிஞ்சிட்டு வர்றேன். ராபெர்ட், நீ சவுகரியமாக இரு’ – உனக்கு பைத்தியம் பிடிச்சிட்டதா? நீ வாய் தவறி உளறுகிறாயா இல்லை வேறு ஏதாவதா?’. அயல் தேச திரைப்படங்கள் தமிழில் dub ஆகி வெளியாகும்போது அது நகைப்புக்குரியதாவதற்கு இதுவும் ஒரு காரணம்.

‘குருடன்’ என ஆரம்பத்திலும் ஓரிரு பக்கங்களில் ‘பார்வையற்றவன்’ எனவும் செங்கதிர் எழுதியிருக்கிறார். “குருடன் என அழைத்த கதைசொல்லி மனம் திரும்பி பார்வையற்றவன் என அழைக்க ஆரம்பித்துவிட்டான்” என இக்கதை குறித்த கட்டுரையொன்றை வாசிக்க நேர்ந்தது. வாசகர்கள், தமிழ் சினிமாவின் பாணியில் இக்கதையை திசைதிருப்பிச்செல்லும்படி மொழிபெயர்ப்பு நிகழ்ந்திருக்கிறது. அதேபோல கதைசொல்லியும் ராபெர்ட்டும் ஒருவருக்கொருவர் ஒருமையில் அழைத்துக்கொள்வதான வசனங்களும் இடம்பெறுகின்றன. இக்கதையில் அவ்விருவருக்குள்ளும் அத்தகைய உரையாடல் ஒரு அந்நியத்தன்மையைத் தருவதாய் இருக்கிறது. ராபெர்ட்டின் குணாதிசியத்தை வெளிப்படுத்தும் விதமாக அவன் கதைசொல்லியை ‘bub’ எனவும் கதைசொல்லியின் மனைவியை ‘dear’ எனவும் விளிப்பதாக இடம்பெறுகிறது. ராபெர்ட் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஒரு அன்னியோன்யம் இருக்கிறது. இது தமிழுக்கு வரும்போது ஓரிரு இடங்களில் அவற்றைக் கத்திரித்துவிட்டார். கார்வரின் வர்ணனையில் (கதைசொல்லியின் குரல்) வினா எழுப்பும்படியாகவும் வியந்துபோவதாகவும் சலிப்புறும்படியாகவும் ஆச்சர்யக்குறி வியப்புக்குறி ஆங்காங்கே இட்டுச்செல்கிறார். செங்கதிர், அந்த விஷயங்களில் கவனம்செலுத்தவில்லை. அதே போல, ‘கதீட்ரல்’ என்பதற்கு சில பிரத்யேகத் தன்மையிருக்கிறது. அதை தேவாலயம், பேராலயம் என பொதுமைப்படுத்த முடியாது. ‘Fresco paintings’ என்பதை வண்ணச் சுவரோவியங்கள் என பொதுமைப்படுத்துவதும் முறையாகாது.

‘ராபெர்ட் உங்ககிட்ட டி.வி இருக்கா?’ – ‘டியர். இரண்டு தொலைக்காட்சிப்பெட்டி இருக்கு.’ – ஒரே வார்த்தைக்கு அடுத்தடுத்த வரிகளில் வெவ்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பதை அலட்சியத்துடனான அணுகுமுறை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

My wife said things like, ‘To your left here, Robert. That’s right. Now watch it, there’s a chair. That’s it. Sit down right here. This is the sofa. We just bought this so for two weeks ago’ – என் மனைவி எச்சரித்துக் கொண்டேயிருந்தாள், ‘ராபெர்ட் உனக்கு இடப்பக்கம், அது சரி. இப்பொழுது ஜாக்கிரதையாக நட. இருக்கை முன்னால் இருக்கு. அதேதான். அதிலேயே உட்கார். இது சோபா. இதை நாங்கள் இரண்டு வாரம் முன்புதான் வாங்கினோம்’. பார்வையற்ற ராபெர்ட்டுக்கு வழிகாட்டுவதான வர்ணனை இது!

O

ஜி.குப்புசாமி:

கதைசொல்லியின் மேம்போக்கான எண்ணத்தை வெளிப்படுத்தும் அலட்சிய பேச்சு, கிண்டல் தொனி போன்றவற்றை ஜி.குப்புசாமி தனது மொழிபெயர்ப்பில் கடைபிடித்திருக்கிறார். அனைத்தையும் தமிழ்படுத்த முயலாமல் ஆங்காங்கே ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பதும் பொருத்தமாகவே இருக்கிறது. இருந்தும் ஆங்காங்கே சில நெருடல்கள் உள்ளன.

ராபெர்ட் மீதான பொதுபுத்தியை அலட்சியத்தை வெளிப்படுத்தும் தொனியைக் கட்சிதமாக மொழிபெயர்ப்பில் கொண்டுவந்திருந்தபோதிலும் ஆரம்ப பத்திகள் சிலவற்றில் பார்வையற்றவன் எனும் பதத்தை இவரும் பயன்படுத்திருக்கிறார்.

‘Period. Besides,’ she said, ‘Goddamn it, his wife’s just died! Don’t you understand that? The man’s lost his wife!’ என்பதை ‘நிறுத்துங்கள். காட்டமிட, அவருடைய மனைவி இப்போதுதான் இறந்துவிட்டாள்! உங்களுக்குப் புரிகிறதா? அந்த மனுஷனுக்கு, பொண்டாட்டி செத்துப்போய்விட்டாள்!’ என மொழிபெயர்த்திருக்கிறார். அர்த்தமற்ற, வேறொரு பொருள் தருவதான, வேறொன்றாகச் சொல்வதான பிழையான மொழிபெயர்ப்பு இது.

‘He was leaning forward with his head turned at me, his right ear aimed in the direction of the set’ என்பதை ‘என்னை நோக்கித் தலையைத் திருப்பி வலது செவியை தலையைத் திருப்பி வலது செவியை டிவியிருக்கும் திசையை நோக்கி முன்னால் சாய்ந்து கொண்டிருந்தான்’ என மொழிபெயர்ப்பாகியுள்ளது. ‘தலையைத் திருப்பி வலது செவியை’ என்பது இரு முறை அச்சாகி உள்ளது. அச்சுப் பிழை எனினும் தமிழ் பதிப்புச் சூழலில் எழுத்தாளர் மீதே பழி சுமத்த வேண்டியிருக்கிறது.

‘Wear green eye-shadow around one eye’ என்பதை ‘ஒரு கண்ணைச் சுற்றி பச்சைக் கலர் மையை ஈஷிக்கொண்டு’ எனவும் ‘Let me get you a drink’ என்பதை ‘உங்களுக்கொரு பானம் கொண்டுவந்திருக்கிறேன்’ எனவும்

இறுதியாக,

‘My dear, I have two TVs. I have a color set and a black-and-white thing, an old relic. It’s funny, but if I turn the TV on, and I am always turning it on, I turn on the color set. It’s funny, don’t you think?’ என்பதை ‘அன்பே, என்னிடம் இரண்டு டி.விக்கள் உண்டு. ஒன்று கலர், மற்றது பிளாக் அண்டு ஒயிட்; ஒரு பழைய அடாசு. வேடிக்கை என்னவென்றால் டிவியை நான் போட்டால் – எப்போதுமே போட்டுக் கொண்டிருக்கிறேன் – கலர் டிவியைத் தான் போடுகிறேன். இது வேடிக்கையானதுதான், என்ன சொல்கிறீர்கள்?’ எனவும் மொழிபெயர்த்திருக்கிறார்.

O

மிகச் சொற்பமான வாசகர்களுக்காக மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்களின் மனம் புதிரான ஒன்று. புனைவுக்குள் இயங்கிக்கொண்டிருக்கும் படைப்பாளிகளுக்கே உந்து சக்தியாக என்ன இருக்கிறது எனும் கேள்வி எழும்போது, மொழிபெயர்ப்பாளர்கள்?

புனைவைப் போலவே மொழிபெயர்ப்பையும் கலையாக பாவிக்கும்போதே ஆத்மார்த்தமான மொழிபெயர்ப்பு சாத்தியமாகிறது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக மொழிபெயர்ப்பானது ஒரு படைப்புச் செயல் என்பதன்றி வேலையாக தற்போது பாவிக்கப்படுகிறது. மிக நுட்பமான வாசிப்பு, தமிழிலிலும் ஆங்கிலத்திலும் புலமையுற்றிருத்தல், படைப்பாளியின் தொனியை அறிய முற்படுதல், மூலப்பிரதியின் பின்புலத்தை உள்வாங்கிக்கொள்ளல், ஒவ்வொரு எழுத்தாளனிடமிருக்கும் தனித்துவமான மொழிநடையின் சாரத்தை மொழிபெயர்ப்பில் சாத்தியப்படுத்துதல் என சில நுட்பமான விஷயங்களால் சிறப்பான மொழிபெயர்ப்பு நிகழ்கிறது. ஓர் எழுத்தாளன், ‘நான் வாசகனுக்காக எழுதுவதில்லை, எனக்காகவே எழுதுகிறேன்’ என பிரகடனப்படுத்திக்கொள்ளலாம். மொழிபெயர்ப்பாளனும் ஒரு கலைஞன் என்றபோதிலும், அத்தகைய கர்வமிக்கக் கூற்று மொழிபெயர்ப்பாளனுக்கானதல்லவே! அயல் இலக்கிய வாசிப்பை வேண்டி மொழிபெயர்ப்பை மட்டுமே நம்பியிருக்கும் வாசகர்களுக்காகப் பெரும்பணி ஆற்றும் மொழிபெயர்ப்பாளனுக்கு – புனைவாளனைக் காட்டிலும் – வாசகன் குறித்த கூடுதலான அக்கறை அவசியம் என்பதை நினைவூட்ட வேண்டியிருக்கிறது.

O

[‘இடைவெளி’ மூன்றாம் (ஜனவரி, 2018) இதழில் வெளியான கட்டுரை]

Leave a comment